பாட்னா: பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். எட்டாவது முறையாக பிகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் கடந்த 10ஆம் தேதி மீண்டும் பதவியேற்றார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று(ஆக.16) விரிவாக்கம் செய்யப்பட்டது. பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 31 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 16 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் சகோதரரும், ஆர்ஜேடியின் மூத்த தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ், லலித் யாதவ், சுரேந்திர பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அசோக் சவுத்ரி, லேஷி சிங் உள்ளிட்டோரும் பதவியேற்றனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் பதவியேற்றனர். இன்னும் சில அமைச்சரவை இடங்கள் காலியாக உள்ள நிலையில், அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜேடியுவை அழிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதால், நிதிஷ்குமார் அழுத்தத்தில் இருந்தார் - தேஜஸ்வி யாதவ் பிரத்யேக பேட்டி!