தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய பணிகள், புதிய பொறுப்புகள்: கரோனா வழங்கிய எதிர்கால வேலைவாய்ப்புகள்! - McKinsey report

சமீபத்தில் ’கோவிட்-19 க்கு பிறகு பணிச்சூழலின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் மெக்கன்சி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் பேர், புதிய வேலைவாய்ப்புத் துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

New jobs
வேலைவாய்ப்புகள்

By

Published : Apr 3, 2021, 8:44 AM IST

Updated : Apr 3, 2021, 9:54 AM IST

கோவிட்-19 பேரிடரானது, வேலைவாய்ப்புச் சந்தையின் முகத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், நேரடியாகக் களத்திற்குச் சென்று பணிபுரியும் துறைகளைச் சேர்ந்தவர்கள், கடும் சிரமங்களுக்கும் பணி இழப்புக்கும் ஆளாகியுள்ளனர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உலகம் முழுவதும் தற்போது 25 விழுக்காடு துறைகள் தங்களது பணிப்பிரிவுகளையும் சூழலையும் மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், பல்வேறு துறைகள் புதிய தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால் புதிய புதிய வேலைவாய்ப்புகள், பணித் துறைகள், பொறுப்புகள், பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தானியங்கி டிஜிட்டல் தொழில்நுட்பம், டேட்டா பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவுப் பிரிவுகளில் ஏராளமான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

எதிர்காலத்தில் இந்தப் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களோடு திறன்களையும், துறை சார்ந்த அனுபவங்களையும் சேர்த்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதால், பணியாளர்கள் சவால்களைச் சந்திக்கத் தயாராகி உள்ளனர். பொதுமுடக்கத்தின்போது உலகம் முழுவதும் பணிபுரியும்விதம் முற்றிலுமாக மாறி உள்ளதால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.

வெளியிடங்களுக்குச் செல்லாமலேயே பொருள்களை வாங்கி இருக்கிறோம், சமூகத்தோடு இணக்கமான சூழலை உருவாக்கியுள்ளோம், ஆன்லைன் பொழுதுபோக்கை ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்நிலை தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் தொடரும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பேரிடர் காலத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை அனைத்துத் தரப்புப் பணியாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். குறிப்பாக வீட்டிலிருந்தே பணியாற்றுதல், மின் வணிகம், காணொலிக் காட்சிகள் மூலம் அலுவலகச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், ஆன்லைன் கல்வி உள்பட ஏறக்குறைய அனைத்துத் துறைகளும் ஆன்லைன் மூலம் தங்களது இயக்கத்தைத் தொடர்ந்து நகர்த்திக்கொண்டு வருவதால், இந்தச் சூழல் நமக்குப் பழகிவிட்டது.

இந்தப் பணிச்சூழலில் நிறுவனங்கள் பெருமளவிற்கு நிர்வாகச் செலவுகளைக் குறைத்துள்ளதுடன், பல்வேறு பலன்களையும் பெற்றுள்ளதால், தற்போது வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை நிரந்தரமாக்குவதற்குத் தயாராகிவிட்டன. தவிர்க்கமுடியாத துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் நிறுவனங்களுக்கு அல்லது தொழிற்சாலைகளுக்கு வந்தால் போதும், மற்ற பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற முறையை நிரந்தரமாகக் கடைப்பிடிக்க நிறுவனங்கள் முன்வந்துவிட்டன.

இந்த முறையால் புதிய திறன்கள் வளர்க்கப்படுவதுடன், தொழில்நுட்பங்களில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி மிக எளிதாகச் செல்ல முடியும் என்றும், உற்பத்தித்திறன் அதிகரித்திருப்பதாகவும் நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நிறுவனங்கள் மட்டுமின்றி, பணியாளர்களும் இந்தப் பணிச் சூழலுக்குத் தங்களை இணக்கமாக்கிக் கொண்டிருப்பதால், எதிர்காலத்திலும் இதைத் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். உதாரணமாக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் காணொலி காட்சி மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது எளிதாக இருப்பதாகவும், பேரிடர் காலம் முடிந்த பின்னும் இதைத் தொடர வேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளனர்.

சமீபத்தில் ’கோவிட்-19 க்குப் பிறகு பணிச்சூழலின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் மெக்கன்சி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளில் உள்ள, 100 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள்… இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் 16 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் புதிய வேலைவாய்ப்புகளை, புதிய துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், உலக மக்கள் தொகையில் பாதி அளவை இந்த எட்டு நாடுகள் கொண்டிருப்பதுடன், உலக அளவிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஆறு விழுக்காடு இந்த நாடுகள் அளிக்கின்றன. இதன்மூலம் வேலைவாய்ப்புத் துறையில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் பேர், புதிய வேலைவாய்ப்புத் துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பேரிடர் காலத்தில் தொடங்கப்பட்ட வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறை, வெற்றிகரமான அனுபவத்தை கொடுத்துள்ளதால் நிறுவனங்கள் தற்போது இதை நிரந்தரமாக்க முடிவுசெய்து, அதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2020இல் மெக்கன்சி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனங்கள் தங்களது அலுவலகப் பரப்பளவில் 30 விழுக்காடு குறைக்க முடிவுசெய்துள்ளன.

இதன்மூலம் அவர்களது நிர்வாகச் செலவுகள் பெருமளவு குறையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் பொதுப்போக்குவரத்து, ஹோட்டல் வசதிகள், அதற்கான செலவுகள் குறையும். மெக்கன்சி ஆய்வின்படி தொழில்முறையிலான போக்குவரத்துப் பயணங்கள், 20 விழுக்காடு அளவுக்குக் குறையும். குறிப்பாக வான்வழிப் பயணங்கள் வெகுவாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் விமானங்கள், விமான நிலையங்கள், வாடிக்கையாளர் சேவை மற்றும் உணவு சேவைகளில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் மருத்துவம், ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை, ஆன்லைன் மூலம் பொழுதுபோக்கு அம்சங்கள், வர்த்தகம் அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

உதாரணமாக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் மொபைல் செயலிகள் மூலம், ஆன்லைனிலேயே மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறும் வசதிகள் பெருகும். இந்தச் சூழல் கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கிவிட்டது. நவம்பர் 2020இல் அதிகளவு நோயாளிகள் ஆன்லைனிலேயே மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான புதிய பொறுப்புகள், புதிய பதவிகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டேட்டா பகுப்பாய்வு, டேட்டா ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், இயந்திரக் கற்றல் வல்லுநர்கள், ரோபோட்டிக் பொறியாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவு காத்திருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ’எதிர்காலப் பணிகளுக்கான ஆய்வறிக்கை 2020’இல், பல புதிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 85 மில்லியன் வேலைவாய்ப்புகள் மனிதர்களிடமிருந்து இயந்திரங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), விற்பனை மற்றும் உற்பத்தித் துறைகளில் மனிதர்களின் பங்களிப்பு எப்போதும்போல முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பணிகள்; பொறுப்புகள்; வேலைவாய்ப்புகள்

பாதுகாப்பு வல்லுநர்கள், கிளவுட் கட்டமைப்பாளர்கள், டேட்டாபேஸ் நிர்வாகிகள், புரோகிராமர் அனாலிஸ்ட், செல்லிடப்பேசி செயலி வடிவமைப்பாளர், நெட்வொர்க் நிர்வாகி, மென்பொருள் மேம்பாட்டாளர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் மிக அதிக அளவில் பெறப்போவதாக சிஐஓ பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. 800-க்கும் அதிகமான மனிதவளத் துறை வல்லுநர்களிடம் கார்ட்னர் நடத்திய ஆய்வில், 32 விழுக்காடு நிறுவனங்கள் தங்களது முழுநேரப் பணியாளர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றுவதற்கு முடிவுசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நிறுவனங்கள் மட்டுமின்றி 48 விழுக்காடு பணியாளர்களும், முழு நேரமாகப் பணியாற்றுவதைவிட்டு வீட்டில் இருந்தபடியோ அல்லது தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கோவிட்-19 பொதுமுடக்கத்திற்குப் பிறகு இந்த நிலை 30 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நேரடி தொடர்பால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளைத் தவிர்க்கும்விதமாக, உலகளவில் 32 முதல் 50 மில்லியன் வேலைவாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்று, எம்ஐடி தொழில்நுட்ப மதிப்பாய்வு அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.

இதை மெய்ப்பிக்கும்விதமாக, நிறுவனங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மீது அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டன. தங்களது வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலம் தொடர்ந்து தொடர்புகொண்டு, வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என்பதை இந்தப் பேரிடர் காலத்தில் நிறுவனங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளன.

பணியாளர்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் அனுப்பி அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, ஆன்லைன் மூலமாகவே வர்த்தகத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக, தற்போது டிஜிட்டல் மென்பொருள் புரோகிராம்களைக் கொண்டு, ’செயற்கை நுண்ணறிவுடன்கூடிய பணியாளர்கள்’ என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முன்பு மனிதர்கள் பார்த்த வேலைகளை தற்போது மென்பொருள்களே பார்த்துவிடும். இந்தத் தொழில்நுட்பங்களை நிர்வகிக்க, மனிதர்களின் உதவி தேவைப்படும் என்பதால் குறைந்தளவு பணியாளர்கள் இதற்காகப் பணியமர்த்தப்படுவர். இந்த வகை செயற்கை நுண்ணறிவு மூலம், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் நேரத்தில், புதிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளும் மனிதர்களுக்கு உருவாகவுள்ளன.

கடந்த பிப்ரவரி 2021 லிங்க்ட்இன் வேலைவாய்ப்பு அறிவிப்புகளின்படி, மிக அதிக அளவிலான தேவைகளைக் கொண்டுள்ள வேலைவாய்ப்புகளாக மென்பொருள் பொறியாளர், பதிவுசெய்யப்பட்ட செவிலி, விற்பனைப் பிரதிநிதி, திட்ட மேலாளர், உணவு டெலிவரி செய்யும் ஓட்டுநர், பொறியாளர், பிராணிகள் பராமரிப்பாளர், ஜவாஸ்கிரிப்ட் டெவலப்பர், டெவ் ஓபிஎஸ் இன்ஜினியர் ஆகிய பதவிகளுக்கான தேடல் அதிக அளவில் இருந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி 2001 வரையிலான அதிக அளவில் வளர்ச்சி பெரும் பதவிகளாக இருப்பவை:

பிராணிகள் பராமரிப்பாளர்,

மருந்தகத் தொழில்நுட்ப வல்லுநர்,

சில்லறை வர்த்தக விற்பனைப் பிரதிநிதி,

கிடங்குப் பராமரிப்பாளர்,

பாதுகாப்புப் பொறியாளர்,

யூசர் இன்டர்பேஸ் டிசைனர்,

டேட்டா அமைப்பாளர்,

மென்பொருள் பொறியியல் மேலாளர்,

சர்வீஸ் பணியாளர் மற்றும் சில பதவிகள்.

ஏற்கனவே பணியில் இருப்போர் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களை ஏற்க வேண்டிய மனநிலையில் இருக்கும் சூழலில், புதிதாக வேலைதேடுவோர், மாணவர்கள் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆய்வறிக்கையை, ஐபிஎம் வெளியிட்டுள்ளது.

’2021 பணிச்சூழலுக்கான திறன்கள் ஒரு மாற்றம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், மாணவர்களுக்கு வளர்ச்சிக்கான மனநிலை, தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் ஆர்வம், மிகத் தீவிரமாக யோசிக்கும் திறன், எந்தச் சூழலிலும் பிழைக்கும் ஆற்றல், கற்றுக் கொண்டவற்றை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றல், பணி சார்ந்த மற்ற துறைகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வம், வளைந்துகொடுக்கும் தன்மை, அர்ப்பணிப்பு ஆகியவை இருந்தால், நிச்சயம் 2021-க்குப் பிறகான வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவமும், முன்னுரிமையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அடிப்படையில் 2021இல் மிக வேகமாக வளர்ந்துவரும் சைபர் பாதுகாப்புத் திறன்களான அப்ளிகேஷன் டெவலப்மெண்ட், பாதுகாப்பு கிளவுட், செக்யூரிட்டி ரிஸ்க் நிர்வாகம், இன்டலிஜென்ஸ் இன்சிடென்ட் ரெஸ்பான்ஸ், டேட்டா பிரைவசி, அணுகல் மேலாண்மை, பாதுகாப்பு யுக்தி, ஆரோக்கிய தகவல் பாதுகாப்பு ஆகிய தொழில்நுட்பங்களில் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இறுதியாக...

அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுக்க பணிச்சூழல் பெருமளவில் மாற உள்ளது. இதற்கு கோவிட் மட்டுமே காரணமல்ல. உலகம் முழுக்க நிலவிவரும் பொருளாதார மந்தநிலையும் இதற்கு முக்கியக் காரணம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை பணிபுரியும் அலுவலகச் சூழல் இனி மிகப்பெரிய அளவில் குறைந்து, வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் அதிகரிக்க உள்ளது. போக்குவரத்துச் செலவு உள்பட பல்வேறு செலவுகள் குறைவதால், பணியாளர்களும் இந்த முறையில் பணியாற்றுவதை விரும்புகின்றனர்.

ஆன்லைனில் உள்ள செயலிகளின் மூலம் காணொலிக் காட்சிகளை மேற்கொள்வதால், போக்குவரத்துச் செலவுகளும் அதிகளவில் குறையும். எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆய்வின் முடிவில், ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான பணியாளர்கள் தங்களது திறன்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக கடந்த ஆண்டைவிட, நான்கு விழுக்காடு அதிகரித்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் அதிகபட்ச திறன்களைப் பயன்படுத்திக்கொள்ள, இந்தச் சூழலை கையில் எடுத்துள்ளனர்.

மிக வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களான ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், டிஜிட்டல்மயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை, தற்போதுள்ள பணிச் சூழலை ஏறக்குறைய முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளன. இந்தத் தொழில்நுட்பங்களைக் கற்று, தங்களது திறன்களை மேம்படுத்தி, டிஜிட்டல் உலகுடன் சேர்ந்து பயணிப்பதால் மட்டுமே, பணியாளர்கள் 21ஆவது நூற்றாண்டில் திறம்பட முன்னேற முடியும்.

உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலகம் முழுவதும் 26 நாடுகளில் வரும் 2025ஆம் ஆண்டில், 85 மில்லியன் வேலைவாய்ப்புகள் மறைந்து, புதிதாக 97 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். பணியாளர்களின் நலன்களைக் காப்பதற்காக நிறுவனங்களும், அரசுகளும் இணைந்து அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு அளவீடுகளை வகுக்க வேண்டும். அத்துடன், அவர்களது திறன்களை மறுகட்டமைப்புச் செய்தல், புதிய திறன்களை வளர்த்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய பாதையில் பயணிக்க உள்ள இந்தச் சூழலில், புதிதாகக் கல்லூரி அல்லது பட்டமேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள்தான் சவால்களைச் சந்திக்கப்போகின்றனர். 2020இல் பட்டப்படிப்புகளை முடித்து, 2021இல் காலடி எடுத்துவைக்கும் மாணவர்கள், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை மேற்கொள்வார்கள்.

எனவே 2021ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகளை மட்டும் எதிர்நோக்கி காத்திருக்காமல், பணி அனுபவத்தைப் பெறுவதற்காக இன்டர்ன்ஷிப், சிறிய அளவிலான ப்ராஜெக்ட்களை கையாண்டு, தொழில்நுட்பங்களையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைந்து, வாய்ப்புகளைத் தேடும்போது முன்னுரிமையும், முக்கியத்துவத்தையும் பெறலாம். எனவே நல்ல வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்காமல் அனுபவத்தையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் எந்த ஒரு தளத்திலும் இயங்கி, எப்போதும் தங்கள் துறையில் இணைந்திருப்பது நல்ல எதிர்காலத்தைத் தரும்.

லிங்க்ட் இன் 2020 பணிச்சூழல் கற்றல் ஆய்வறிக்கையின்படி, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள், தற்போதுள்ள திறன் பற்றாக்குறை நிரப்பப்பட வேண்டும். இல்லையேல் புதுமையான பணித்திறன், வாடிக்கையாளர் திருப்தி, தயாரிப்பு மேம்பாடுகள் ஆகிய துறைகளில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும். தற்போதுள்ள சூழலில் 57 விழுக்காடு உலகளாவிய நிறுவனங்கள், தலைமைப் பண்பு, நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. 42 விழுக்காடு நிறுவனங்கள், புதுமையான முறையில் சிக்கல்களைச் சரிசெய்யும் திறன்கள், வடிவமைப்புத் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. 40 விழுக்காடு நிறுவனங்கள் தகவல் தொடர்புத் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

உலகின் பெரும்பாலான நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய கோவிட்-19 பேரிடர், வேலைவாய்ப்புத் துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 195 மில்லியன் அளவுக்கு வேலை இழப்புகள், கல்வியில் இடையூறு, இளைஞர்கள் கற்றுக்கொள்வதில் தடை ஆகிய பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவை உடனடியாகக் களையப்பட வேண்டும்.

நல்ல வேளையாக தானியங்கி தொழில்நுட்பம். டிஜிட்டல்மயமாக்கம் இவை தற்போதுள்ள தேக்கத்தைச் சரிசெய்து, மிக வேகமாகப் பல்வேறு துறைகளை முன்னெடுத்துச் செல்லும். இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில், 2022ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 54 விழுக்காடு பணியாளர்கள் தங்களது திறன்களை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டும் அல்லது புதிய திறன்களை வளர்த்துக் கொண்டு, வளர்ந்துவரும் பணிச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதனால் பணியாளர்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச அளவிலான நிறுவனங்களுக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, இளைஞர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டு புதிய தொழில் நுட்பங்களை கற்று, புதிய பணிச்சூழலுடன் தங்களை இணக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதுவரை இல்லாத அளவுக்கு இயந்திரங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. உலகம் முழுக்க சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, 2015ஆம் ஆண்டு வரை 4.9 விழுக்காடு அளவுக்குத்தான் ரோபோக்களைப் பயன்படுத்தின. இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் அளவுக்கு ரோபோக்களின் பயன்பாடு இருக்கும் என்று கார்னர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அரசுகளும் உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவர்களைத் தயார்ப்படுத்த தொடங்க வேண்டும். எதிர்காலத் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வையும், பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இயந்திரங்களுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தங்களுக்கான பணி வாய்ப்புகளை நிரந்தரமாகப் பெற வழிவகுக்கும் கல்வியை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க:மார்ச்சில் இரட்டிப்பான வாகன விற்பனை: அசத்தும் மாருதி, டோயோட்டா!

Last Updated : Apr 3, 2021, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details