பெங்களூரு: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெங்களூரு கடும் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பல ஐடி ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர்.
எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏமலூர் பகுதியில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் டிராக்டர் மூலம் அவர்களது அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர். இது குறித்து ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘நகரத்தில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு டிராக்டர் சவாரி செய்வது முற்றிலும் புதிய அனுபவமாகும்.
அலுவலகத்தில் இருந்து அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாது. எடுத்தால் எங்கள் பணி பாதிக்கப்படும். டிராக்டர்களில் அலுவலகம் செல்ல ரூ50 ஆகும்’ எனத் தெரிவித்தார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘ பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் மாநில தலைநகரில் மழை மற்றும் வெள்ளத்தால் ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் குறித்து விவாதிப்பதாக கூறினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்து, தண்ணீர் தேங்குவதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேசுவோம். மழையினால் ஏற்பட்ட இழப்பீடு மற்றும் பிற சேதங்கள் குறித்தும் விவாதிப்போம்" என்று பொம்மை தெரிவித்துள்ளார்.