டெல்லி:இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் பழைய கார்கள் விற்பனை சந்தை படிப்படியாக முன்னேறி வருகிறது. அண்மைக்காலங்களில், பழைய வாகனங்களை வாங்குதல் மற்றும் விற்பனையில் ஆன்லைன் விற்பனையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், வாகனங்களை அடுத்தடுத்த நபர்களுக்கு விற்கும்போது, மூன்றாம் நபர் ஏற்க வேண்டிய சேதப்பொறுப்புகள், கடனை திருப்பி செலுத்தாதவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், 1989ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் அத்தியாயம் 3-ல், பழைய வாகன விற்பனைக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கான வழிமுறையை முன்மொழிந்துள்ளது.
விற்பனையாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை மற்றும் வாங்குதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் G.S.R693(E) என்னும் வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள்:
- விற்பனையாளரின் நம்பகத்தன்மையை அடையாளம் காண, பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனையாளர்களுக்கான அங்கீகார சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பதிவு செய்த உரிமையாளருக்கும், விற்பனையாளருக்கும் இடையே வாகனத்தை கொண்டு செல்லும் அறிவிப்புக்கான நடைமுறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வைத்துள்ள விற்பனையாளரின் அதிகாரம் மற்றும் பொறுப்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- விற்பனையாளர்கள் தங்கள் வசமுள்ள வாகனங்களின் பதிவுச் சான்றிதழை புதுப்பித்தல், உடல்தகுதிச் சான்றிதழை புதுப்பித்தல், பதிவுச் சான்றிதழின் நகல், தடையில்லா சான்றிதழ், உரிமையை மாற்றுதல் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- ஒழுங்குமுறை நடவடிக்கையாக, பயணத்துக்கான காரணம், ஓட்டுநர், பயண நேரம், பயண தூரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மின்னணு வாகன பயணப் பதிவேட்டைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் இடைத்தரகர்கள், விற்பனையாளர்களை அங்கீகரித்து அதிகாரமளிக்க உதவுவதுடன், அத்தகைய வாகனங்களை விற்கும்போதும், வாங்கும்போதும் நடைபெறும் மோசடி குற்றங்களை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 30 நாட்களுக்குள் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பீஸ்ட், விக்ரம் திரைப்படங்களின் VFXஐ வடிவமைத்த PhantomFX நிறுவனத்தின் அடுத்த முன்னெடுப்பு!