புதுச்சேரி: நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று (மே 10) முதல் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
புதிய ஊரடங்கு நடைமுறை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் செய்தியளர்களிடம் கூறுகையில் ’’புதிய ஊரடங்கு நடைமுறை விதிகள் இன்று 10ஆம் தேதி நள்ளிரவு முதல் தான் அமல்படுத்தபடுகிறது.
நாளை (மே11) முதல் அனைத்து அத்தியாவசிய கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.
இந்த கட்டுப்பாடுகளை மீறினால் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூடப்படும்.
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வசதிக்காக அந்த நிறுவனங்கள் கரோனா நடைமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. தொழிலாளர்கள் தங்களுடைய அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
வீடு, கட்டட பணிகளுக்கான பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஏற்கனவே, இருப்பில் உள்ள கட்டுமானப் பொருட்களை வைத்துக்கொண்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம்.
அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து பிற செயல்பாடுகள் எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்வோர் கட்டாயம் தங்களுடைய அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
பறக்கும் படையினர் அதனை ஆய்வு செய்வர். அத்தியாவசியப் பணி இல்லாமல் நோய் பரப்பும் வகையில் சுற்றுவது தெரிந்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.
இதையும் படிங்க:அமலானது முழு ஊரடங்கு: நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை!