தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்ய அதிபர் புதின் கைது? - சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன? - Russia President Putin arrest

உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியதாக கூறி ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 7:37 AM IST

தி ஹாக்: கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது. ராணுவ நடவடிக்கை தொடங்கி ஓராண்டு கடந்த நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்தன.

மேலும் அப்பாவி மக்கள் பலர் இந்த ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர். உக்ரைனில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகளை ரஷ்ய வீரர்கள் தேடித் தேடி அழித்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள், நேரிடியாகவோ, மறைமுகமாகவோ உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவின் போரால், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் சொந்த வீடுகளை இழந்து அகதிகளாக உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

இந்த போரில் ரஷ்யாவுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கிலான ரஷ்ய வீரர்கள் இந்த போரில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உருக்குலைந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் தளவாடங்கள் கிடக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு உதவியதாக தகவல்கள் வெளியாகின. ஈரான் கொடுத்த அதிநவீன ட்ரோன்களை கொண்டு உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த ராணுவ தளவாடங்களை ரஷ்யா அழித்ததாக செய்திகள் வெளியாகின. இதனிடையே உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா போர்க் குற்றம் புரிவதாக கூறி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா போர்க் குற்றம் புரிவதாக சர்வதேச நிதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து குழந்தைகளை அதிபர் புதின் கடத்தியதாக நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹாக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் உக்ரைனில், ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இந்த சட்டவிரோத நாடு கடத்தல் மற்றும் குழந்தைகளை இடமாற்றம் செய்வது போர் குற்றத்திற்கு சமமானது என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் நல ஆணையர் மரிய அலெக்ஸீவ்னா லவோவா- பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பத்தினர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொண்ட ஒரு நாட்டின் தலைவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது, உலக வரலாற்றிலே நடந்த முதல் சம்பவம் என்பது கவனிக்கத்தக்கது. உக்ரைன் மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறுகையில், "தேசிய தகவல் ஆணையத்தின் அறிக்கைகளின் படி உக்ரைனில் இருந்து 16 ஆயிரத்து 226 குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்று உள்ளது. அதில் 308 குழந்தைகள் மட்டுமே மீட்க முடிந்ததாக" அவர் தெரிவித்து உள்ளார்.

அதேநேரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டுக்கு பதிலளித்த ரஷ்ய செய்தி தொடர்பாளார் டிமிட்ரி பெஸ்கோவ், "ரஷ்யா சர்வதேச நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. அதன் முடிவுகள் சட்டப்படி செல்லாது. நீதிமன்றத்தின் நடவடிக்கை மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க:கட்டிய 3 மாதத்தில் குளிர்பதன கிடங்கு இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details