ஹைதராபாத்:உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவால் இன்று (அக்-10) காலை உயிரிழந்தார்.
இந்திய தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் இடத்தை பிடித்தவர்தான் இந்த முலாயம், இயல்பாகவே வெளிப்படையான கருத்துகளைக் கூறுபவர். காங்கிரஸின் மரபிற்கு இணையாக சவால் விடும் ஒரு இணையான ஜனநாயக தளத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றவர். பாஜகவின் ஆக்கிரமிப்பை முறியடித்து, மதச்சார்பற்ற மூன்றாவது கட்சியின் தலைவராக தன்னை நிலைநிறுத்த முயன்றவர். மாநிலக் கட்சிகளின் குரல்கள் மற்றும் மாநிலங்களின் கோரிக்கைகளை அதிகாரத்தின் தேசிய தாழ்வாரங்களுக்குக் கொண்டு சென்ற முக்கிய அரசியல்வாதி ஆவார்.
முலாயம் நேதாஜி என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் மூன்று முறை முதலமைச்சராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மல்யுத்தத்தின் மீது முலாயமிற்கு அதீத ஆர்வம் இருந்ததின் காரணமாக மல்யுத்தம் கற்றுக்கொண்டார். இந்திய அரசியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்ட ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்: முலாயம் 1992இல், சமாஜ்வாதி கட்சியை உருவாக்கியபோது, பிராந்தியக் கட்சிகளும் தேசிய கட்சிகளின் மீது தங்கள் சொந்த ஆதிக்கத்தை வரையறுக்கலாம் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், நான்கே ஆண்டுகளில் அது சாத்தியம் என்பதை முலாயம் நிரூபித்தார். சமாஜ்வாதி கட்சி வெளிப்படையாகப் போரிடும் காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி கட்சிகளுக்கு இடையேயான சமநிலையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அது சிறிய பிராந்தியக் கட்சிகள் தேசிய அளவில் தங்கள் குரலைப் பதிவுசெய்யும் வகையில் மதச்சார்பற்ற மூன்றாவது முன்னணி கட்சியை உருவாக்க வழிவகை செய்தது.
பாஜக எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்புச்சக்திகளை உள்ளடக்கிய மூன்றாவது முன்னணி கட்சியை உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றியவர்களில் முலாயம் சிங்கும் ஒருவர் ஆவார்.
1996ஆம் ஆண்டு முலாயம் எம்.பி.ஆக பதவி வகித்தபோது, தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகப்பதவி வகித்தார். முலாயம் 1939ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று ஈட்டாவா மாவட்டத்தின் சைஃபாய் கிராமத்தில் பிறந்தார். முலாயமிற்கு 4 சகோதரர்கள் இருந்தனர். ஈட்டாவா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள பிஆர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
முலாயமிற்கும் அவரது முதல் மனைவி மாலதி தேவிக்கும் பிறந்தவர் தான், அகிலேஷ் யாதவ். முலாயம் சிங் சோசலிச தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 15 வயதில் சோசலிசத்தைத் தழுவினார். இந்த இயக்கத்தில் பணியாற்றிய போது, அவர் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். இதனையடுத்து படிப்படியாக கடந்து 1989ல் முதன்முறையாக உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார். அதன்பின்னர் 1990ல் மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசு வீழ்ச்சியடைந்தது. 1992இல் சமாஜ்வாதி கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு, சந்திரசேகரின் சமாஜ்வாதி ஜனதா கட்சியில் இருந்து வந்தார்.
மல்யுத்த பாதை மாற்றம்:1962இல் நடந்த மல்யுத்தப்போட்டிதான் முலாயம் சிங்கின் பாதைய அரசியல் களத்திற்கு மாற்றியது. இளம் மல்யுத்த வீரரின் அதிர்ஷ்டத்தை மாற்றியது. மல்யுத்த மைதானத்திலிருந்து அரசியலின் தாழ்வாரங்கள் வரை முலாயமின் பயணம் அவரது வாழ்க்கையைப் போலவே வண்ணமயமானதாக இருந்தது. ஜஸ்வந்த் நகரில் நடந்த மல்யுத்தப்போட்டியின் போது முலாயம் சிறப்பாக விளையாடினார்.
அதனைக் கண்ட ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் நாது சிங் மிகவும் ஈர்க்கப்பட்டு, முலாயமை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அரசியல் பயணத்தின் முக்கிய ஆரம்பமாக 1967ஆம் ஆண்டு நாது சிங் முலாயம் சிங் யாதவிற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்.
இந்த வாய்ப்பிற்கு பின்னர் இதுவரை 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார், முலாயம் சிங் யாதவ். முதன்முதலில் 1989இல் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரானார். பின்னர் அடுத்த ஆண்டே நவம்பர் 1990இல் வி.பி. சிங்கின் மத்திய அரசு வீழ்ச்சியடைந்தது.