ஹாங்சோ:19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி - மங்கோலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மங்கோலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் ஆகிய இருவரும் 19 மற்றும் 16 ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திருப்பினர்.
இதனை அடுத்து களம் இறங்கிய குஷல் மல்லா ரூத்ர தாண்டவம் ஆடி மங்கோலியா அணியினரின் பந்து வீச்சை விளாசி தள்ளினார். சிக்ஸருக்கும், பவுண்டரிக்குமாக பறக்க விட்ட அவர் 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து புது சாதனை படைத்தார். தொடர்ந்து ஆடிய அவர் 50 பந்துகளில் 12 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களம் கண்ட திபேந்திர சிங் ஐரி முரட்டுத்தனமாக ஆடி மாஸ் காட்டினார். 10 பந்துகளை சந்தித்த அவர், அதில் 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்து அரை சதம் கடந்து அசத்தினார். இருவரின் அபார ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு நேபாள அணி 314 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய மங்கோலிய அணி, நேபாள வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.