டெல்லி:நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகிறார் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில் நேபாள பிரதமரின் வருகை அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வரும் தியூபா, ஏப்ரல் 2ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். தியூபா வாரணாசிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமராக பதவியேற்றபிறகு தியூபா மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
நேபாள பிரதமரின் இந்தியா பயணம் இரு நாடுகளுக்கு இடையில் அவ்வப்போது நடக்கும் உயர்மட்ட பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான பயணம். இருநாட்டின் பரஸ்பர நலன், உறவு, வளர்ச்சி, பொருளாதாரம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும்.