டெல்லி:இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 132ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அவரது நினைவிடத்திலும், ட்விட்டரிலும் அவருக்குத் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்திவருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் இடம்பெற்றுள்ள உள்ள தலைவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவது என்பது நாடாளுமன்ற நடைமுறைகளில் ஒன்று.
காங்கிரஸ் மரியாதை
அந்த வகையில், நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் உள்ள ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், மாநிலங்களை தலைவர், மக்களவை தலைவர், அமைச்சர்கள் என யாரும் கலந்துகொள்ளவில்லை. இது நாடாளுமன்ற நடைமுறையை மீறும் செயல் என மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், திரிணாமூல் தலைவர் டெரக் ஓ பிரையன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
என்ன கொடுமை சார் இது?
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள தலைவர்களின் உருவப்படங்களுக்கு, அவர்களின் பிறந்தநாள் அன்று மரியாதை செலுத்தும் பாரம்பரிய விழாவில் இன்று அசாதாரண காட்சி ஒன்று நிகழ்ந்தது. மக்களவையில் சபாநாயகர் வரவில்லை. மாநிலங்களவைத் தலைவர் வரவில்லை. ஒரு அமைச்சர் கூட வரவில்லை. இதை விட கொடுமையாக இருக்க முடியுமா?" எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டு டெரக் ஓ பிரையன் ட்வீட்டில், "இனி எதுவும் என்னை ஆச்சர்யப்படுத்தாது. இந்த ஆட்சியானது நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்கள் அவமதிக்கப்பட்டு வந்தன. அதில், இன்று நாடாளுமன்றமும் ஒன்றாகிவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி ஜவஹர்லால் நேருவின் பிறந்தாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்துவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நேரு 132ஆவது பிறந்தாள்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி