இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள செல்வசெழிப்பான குடும்பத்தில் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14இல் பிறந்தவர் ஆவார். வளம்மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் காங்கிரஸில் இணைந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் பொறுப்பேற்றார். அவரது பிறந்தநாளை இன்று (நவ-14) காங்கிரஸ் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நேருவின் பாச மகளான இந்திரகாந்தியும் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டதால் பின்னாளில் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். இந்திராவின் இளமைக்காலத்தை ஈர்ப்புமிக்க காலமாக மாற்றிய பங்கு நேருவையே சாரும். இந்திராவின் அருகில் இருக்க முடியாத காரணத்தால், இருவரும் கடிதங்கள் மூலம் உரையாடிக் கொண்டனர். ஏனெனில் இந்திராவின் குழந்தைப்பருவத்தில் நேரு நாட்டிற்காக சிறைவாசத்தை அனுபவித்தார். அப்போது, அவரது பத்து வயது மகளான இந்திராவிற்கு உலகம் உருவான அறிவியல் குறித்தும், வரலாறு குறித்தும் கடிதங்களாக எழுதினார்.
நேரு இந்திரா பிரியதர்ஷினிக்கு மொத்தம் 30 கடிதங்கள் எழுதியுள்ளார். இருவருக்கும் வாசிப்பு மீது இருந்த ஆர்வத்தால் இந்த கடிதப் பரிமாற்றம் வளர்ந்தது. இந்த அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 'letters from a father to his daughter' என்ற புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.