டெல்லி:நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் மே மாதம் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ - NATIONAL TESTING AGENCY) சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வுகளை ஒன்றிய அரசு ரத்துசெய்துவிட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து குறித்து அறிவித்த போது, நீட் தேர்வு பற்றி அறிவிப்பு ஏதும் அரசு வெளியிடவில்லை.