டெல்லி:மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஜூலை 17) பிற்பகல் நடைபெறுகிறது. இத்தேர்வு, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5.20 வரை நடக்கும். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் சித்தா, யுனானி போன்ற படிப்புக்களில் சேருவதற்கான தேர்வாகும். இத்தேர்வை நாடு முழுவதும், 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர். தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
- நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை இரண்டு நகல்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வாணையம் அனுமதித்த உடைகளை மட்டுமே (அரை கை கொண்ட மெல்லிசான ஆடை) அணிந்து வர வேண்டும்.
- தேர்வறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்களான எலக்ட்ரானிக் பொருள்களான மொபைல், வாட்ச் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது.
- தேர்வறைக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக் கூடாது.
- இந்தாண்டு நீட் தேர்வு, பேனா பேப்பர் அடிப்படையிலான தேர்வு என்பதால், தேர்வர்கள் விடை புத்தகத்தில் இருந்து எந்தப் பக்கத்தையும் கிழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், ஏதேனும் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் அவர்கள் பொறுப்பாவார்கள்.
- குறைந்த குதிகால் (Heels) கொண்ட செருப்புகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.
- பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தின் நுழைவு வாயில் மூடப்படும். எனவே அதற்கு முன்னதாக தேர்வர்கள் வர வேண்டும்.
- ஹிஜாப், டர்பன் அணிந்து தேர்வெழுத வருபவர்கள் பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்றிருக்க வேண்டும்.