சென்னை:முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் எடுத்திருந்தாலே மருத்துவ கல்வியிடம் பெறத் தகுதி உடையவராவார் என அறிவிக்குமாறு, தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதியிருந்தாலே தனியார் அல்லது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவ கல்வியிடம் பெற தகுதியுடையவராவார். கட் ஆஃப் மதிப்பெண் ஜீரோ பர்சன்டைல் ஆக மாற்றப்பட்டுள்ளது.
சரி, பர்சன்டேஜ்க்கும், பர்சன்டைலுக்கும் என்ன வித்தியாசம். நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு பரிச்சயமான இந்தி வார்த்தைகள் தற்போது அனைவராலும் தேடப்படுகிறது. பர்சன்டைல் என்பது தேர்வாளர்களின் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப்படுத்துவதாகும். ஒரே மதிப்பெண் பெற்றவர்கள் ஒரே வகையான பர்சன்டைலின் கீழ் வருவார்கள்.
உதாரணத்திற்கு நடந்து முடிந்த யுஜி நீட் தேர்வு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டின் பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவின் போரா வருண் சக்ரவர்த்தி ஒரே பர்சன்டைல் பெற்றவர்களாவர். இவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் இவர்களின் பர்சன்டைல் 99.999901 ஆகும்.
இரண்டாவது மதிப்பெண்ணான 716 மதிப்பெண் ஒருவர் மட்டுமே பெற்றுள்ளார். இவரது பர்சன்டைல் 99.999852 ஆகும். இதே போன்று 3 வது இடத்தை 7 பேர் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவருக்குமே ஒரே பர்சன்டைல் கிடைக்கும். இவ்வாறு கடைசி மதிப்பெண் எடுத்தவர் பூஜ்ஜியம் பர்சன்டைல் எடுத்தவர் ஆவார்.