மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் துணைத் தலைவரும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மூத்த முக்கிய தலைவருமான நீலம் கோர்கே நேற்று (ஜூலை 7) ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது சிவசேனா - பாஜக - தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
எனவே, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் உள்ள கூட்டணி ஆட்சியில் நீலம் கோர்கே இணைந்து உள்ளார். மேலும், நீலம் கோர்கே ஷிண்டேவின் அணியில் மூன்றாவதாக இணையும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
இது தொடர்பாக நீலம் கோர்கே கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சரியான பாதையில் செல்கிறது. மாநிலத்தில் பெண்களின் பிரச்னைகள், மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைவதற்கு நான் முடிவெடுத்தேன்” என தெரிவித்தார்.
அதேநேரம், சிவசேனாவில் நீலம் கோர்கே இணைந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக கருதுவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். மறுபுறம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்பி விநாயக் ராவுத், உத்தவ் தாக்கரேவிடம் ஆதரவைப் பெற்றவர்கள் தனக்கும், சிவசேனாவுக்கும் துரோகம் இழைத்து உள்ளனர் என விமர்சித்து உள்ளார்.