மும்பை: 2024 புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், திடீரென ரிசர்வ் வங்கி காலாவதியான ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், இதுவரை 97.38 சதவீதம் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் நேற்று (ஜன.1) வெளியிட்ட தகவலில், "2023 ஆம் ஆண்டு மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிசம்பர் 29ஆம் தேதி, ரூ.9 ஆயிரத்து 330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது, தற்போது 97.38 சதவீதம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும் ரூ.2,000 நோட்டுகள் இனி தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்" என அறிவித்துள்ளனது.
கடந்த 2016 நவம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என இந்திய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதாவது, ஊழல் மற்றும் கருப்புப் பணத்தைக் குறைக்க வேண்டும். ஆகையால், இனி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பயன்பாட்டில் இருக்காது எனவும் இது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு நடவடிக்கை எனவும், பொதுமக்களிடம் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அன்றை தினத்தில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான நோட்டுகள் ரூ.500, ரூ.1000 ரூபாய்களாகவே இருந்தன. அதனால், அடித்தட்டு பாமர மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக தங்களின் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு மக்கள் பல நாட்களாக வங்கிகளின் வாசலில் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குப் பிறகு, காலாவதியான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பணப்புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு, புதிய ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தின் விடப்பட்டன. அந்த சமயத்தில், பல ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மக்கள் மாற்ற முடியாலும், செல்வந்தர்களிடம் இருந்த கட்டுக்கட்டான காலாவதியான நோட்டுகள் சாலையோரங்கள், ஆறு போன்ற நீர் நிலைகளில் தூக்கி வீசப்பட்டிருந்தன. சில இடங்களில் தீயில் கருகிய நிலையில் உள்ள நோட்டுகள் கிடைத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் என்னதான் புழக்கத்திற்கு வந்தாலும், மக்களிடையே நாளடைவில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கம் குறையத் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் பலருக்கும் ரூ.2000 நோட்டுகள் என ஒன்று இருப்பதே மறந்துவிட்டது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி மீண்டும் கடந்த 2023 மே மாதம் 19ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்த உள்ளதாகவும், அதனால் இந்த நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வங்கிகளில் சென்று முறையாக அவற்றை மாற்றிக்கொள்ளுமாறும் அறிவித்தது. இதனால், செப்டம்பர் 1 வரை மட்டும் 3.32 லட்சம் கோடி மதிப்பிலான புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் வங்கிகளால் திரும்ப பெறப்பட்டன.
மேலும், ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கிகளில் வேண்டுமானும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் டெபாசிட் செய்து கொள்ளலாம் எனவும், ஒரு நபர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்றம் செய்ய முடியும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான மே 19, 2023-லிருந்து வணிகம் முடிவடையும் நேரத்தில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியில் இருந்து, ரூ.9 ஆயிரத்து 330 கோடியாக சரிந்துள்ளதாக டிச.29-ல் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், அகமதாபாத், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை டெபாசிட் மற்றும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்த நிலையில், நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆகையால், மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க, ஏதேனும் ஒரு தபால் நிலையத்தில் இருந்தும், இந்திய அஞ்சல் மூலம் நோட்டுகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றாத நபர்களுக்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது அக்டோபர் 7ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு, வங்கிகளில் அவகாசம் தரப்படாது எனவும் தெரிவித்திருந்த நிலையில், அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு பணத்தை மாற்றுவதற்காக அவகாசம் முடிந்து முற்றிலும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிர வைக்கும் புகைப்படத்துடன் வெளியானது தளபதி 68 படத்தின் 2வது லுக்!