டெல்லி:நாடு முழுவதும் கடந்தாண்டு நடைபெற்ற பல்வேறு குற்றங்கள், குற்றங்களால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், தற்கொலை மற்றும் சாலை விபத்துகள் ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப்பிடித்துள்ளது.
தற்கொலை:தற்கொலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப்பிடித்துள்ளன. 2021ஆம் ஆண்டில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் நடந்துள்ளன. இது 2020ஆம் ஆண்டில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 52ஆக இருந்த நிலையில், தற்போது 7.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. வேலைப்பளு, மனநலப் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தனிமை, வன்முறை, பல்வேறு வகையான போதை, நாள்பட்ட வலி, நிதி நெருக்கடி ஆகிய காரணங்களால் இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலையால் மகாராஷ்டிராவில் 22 ஆயிரத்து 207 பேரும் (13.5%), தமிழ்நாட்டில் 18ஆயிரத்து 925 பேரும் (11.5%), மத்தியப் பிரதேசத்தில் 14 ஆயிரத்து 965 பேரும் (9.1 %), மேற்கு வங்கத்தில் 13 ஆயிரத்து 500 பேரும் (8.2%), கர்நாடகாவில் 13 ஆயிரத்து 56 பேரும் (8%) உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் மொத்த தற்கொலைகளில், மேற்குறிப்பிட்ட முதல் ஐந்து மாநிலங்களில் மட்டும் 50.4 விழுக்காடு நிகழ்ந்துள்ளது. அவற்றை தவிர்த்து பிற மாநிலங்களைச்சேர்ந்து 49.6 விழுக்காடு தற்கொலைகளையே பதிவுசெய்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்தான் குறைந்த அளவில் (3.6%) தற்கொலைகள் பதிவாகியுள்ளது.
சாலை விபத்துகள்:கடந்தாண்டு மட்டும் தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 747 விபத்துகளில் 15 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில், முதலிடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. அங்கு நிகழ்ந்த 18 ஆயிரத்து 228 விபத்துகளில், 18 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகளில் 59.7 விழுக்காட்டினர் அதிவேகமாக சென்றதால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இருசக்கர வாகன விபத்துகளால் மட்டும் 69 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 8 ஆயிரத்து 259 இருசக்கர வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து, உத்தரப்பிரதேசத்தால் 7 ஆயிரத்து 429 இருசக்கர வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
மேலும், மொத்தம் சாலை விபத்துகளில் 20.2 விழுக்காடு விபத்துகளான உயிரிழப்புகள் இரவு 6 - 9 மணியளவில்தான் நிகழ்ந்துள்ளன. இந்த நேரங்களில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 415 விபத்துகளும், மத்தியப்பிரதேசத்தில் 9ஆயிரத்து 798 விபத்துகளும், கேரளாவில் 6 ஆயிரத்து 765 விபத்துகளும் நடந்துள்ளன.