தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணமோசடி: முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது - ரூ. 100 கோடி பணமோசடி

100 கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாக மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், NCP leader Anil Deshmukh, ரூ. 100 கோடி பணமோசடி
முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்

By

Published : Nov 2, 2021, 9:35 AM IST

மும்பை:மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை அலுவலர் சச்சின் வாசி என்பவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மும்பை மாநகர காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீர் சிங் எழுதிய கடிதத்தில்,"உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பார்கள், விடுதிகள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின் வாசியிடம் கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் வீடுகளில் ரெய்டு

இதனையடுத்து, சில நாள்களில் அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஒன்றிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாகப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, மும்பை, நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் சோதனை மேற்கொண்டது.

அனில் தேஷ்முக் மீது பண மோசடி வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை, அவரது உதவியாளர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரூபாயை அமலாக்க அலுவலர்கள் கண்டுபிடித்ததாகவும், இது உதவி ஆய்வாளர் சச்சின் வாசியால் சில மாதங்களில் திரட்டப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிஐ அலுவலர் கைது

இந்த பணம் மராட்டியத்திற்கு வெளியே அமைந்துள்ள சில ஷெல் நிறுவனங்கள் மூலம் தேஷ்முக் நிறுவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. மேலும், இந்நிறுவனம் தேஷ்முக்கின் நெருங்கிய உறவினருக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது.

இச்சூழலில், அணில் தேஷ்முக் மீதான விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய சிபிஐ அலுவலரும், அனில் தேஷ்முக்கின் வழக்கறிஞரும் கைது செய்யப்பட்டனர்.

பல நாள்களாகத் தலைமறைவாக இருந்த அனில் தேஷ்முக் நேற்று (நவ. 1) மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், பல மணிநேர விசாரணைக்குப் பிறகு பணமோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை

ABOUT THE AUTHOR

...view details