மும்பை :மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்திய மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வார்ஷா மாளிகையில் வைத்து நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் ஜூன் 12ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, சரத் பவார் அழைத்ததாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் எழும்பி உள்ள பாஜகவின் எதிர்ப்பு அலையில், எதிர்க்கட்சிகளோடு ஒன்றிணையுமாறு ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவார் அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் சரத் பவாருடன் சேர்ந்து சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரேவும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓரணியில் திரண்டனர். மேலும் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், உத்தவின் முதலமைச்சர் பதவி பறிபோனது. இதையடுத்து பா.ஜ.க ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். உத்தவ் அணியிடம், இருந்த சிவசேனா கட்சி, வில், அம்பு சின்னம் ஆகியவை ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.