மும்பை: கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கில் அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபூர்த்தி, அவரது சகோதரர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இரண்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் இரண்டு வழக்குகளில் தொடர்புடையது போல் உள்ளதாகக் கோரி விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரியா சக்ரபூர்த்தி உள்ளிட்ட 33 பேர் மீது 12 ஆயிரம் பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .
இந்த வழக்கு விசாரணையின் போது, ரியா சக்ரபூர்த்தி, அவரது சகோதரர் சௌபிக் மற்றும் சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களது உரையாடல்களில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் கலந்துகொண்டது. அப்போது போதைப் பொருள் விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல்வேறு திரைப்பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பாலிவுட் போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர்கள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஸ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பலரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.