தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூருவில் இரண்டாம் கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்... எப்ப தெரியுமா?

பெங்களூருவில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் அடுத்தக் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார். இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் வைத்து கூட்டம் நடைபெறும் என முன்னர் கூறப்பட்ட நிலையில், கனமழை உள்ளிட்ட காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Opposition Meeting
Opposition Meeting

By

Published : Jun 29, 2023, 6:24 PM IST

புனே : அனைத்து எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வைத்து நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி அனைத்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் பற்றி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் பெங்களுருவில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார். அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என சரத் பவார் அறிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், சிம்லாவிற்கு பதிலாக பெங்களூரில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க :ராகுல் காந்தி சுரந்த்பூர் பயணம்.. போலீசார் வழிமறித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details