டெல்லி : 2022- 23 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 1 சதவீதமாக வளர்ச்சி அடைந்து உள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி நடந்து முடிந்த 2022- 23 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 1 சதவீதமாக வளர்ச்சி கண்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதேநேரம், கடந்த 2021 - 22 நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதம் வரை கூடுதலாக வளர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2022 - 23 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் கடைசி காலாண்டின் உற்பத்தி 4 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2022 -23 நிதி ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 2 சதவீதமாக பதிவாகி உள்ளது.
கடந்த 2021 - 22 நிதி ஆண்டில் 9 புள்ளி 2ஆக மொத்த உள்நாட்டு உற்பத்தி பதிவான நிலையில், 2022 -23 நிதி ஆண்டில் 7 புள்ளி 2 ஆக விரிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2022 -23 நிதி ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.