ஹைதராபாத்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆரை நேற்று (செப்-11) சந்தித்தார். இந்த சந்திப்பில் தேசிய அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.சி.ஆரின் அதிகாரபூர்வ இல்லமான பிரகதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அப்போது தெலுங்கானா வளர்ச்சி, தேசிய அரசியலில் பிராந்திய கட்சிகளின் பங்கு, தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசியலில் கே.சி.ஆர் செய்ய வேண்டிய முக்கிய பங்கு மற்றும் பிற தேசிய அரசியல் பிரச்சினைகள் குறித்து குமாரசாமி மற்றும் ராவ் ஆகியோர் விவாதித்தனர்.
இது குறித்து கேசிஆர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தெலங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு ராஷ்ட்ரிய சமிதி செய்ததைப் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடன் நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “மிக விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்றும், கொள்கைகளை உருவாக்குவதும் நடைபெறும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசுவாமி அவரது ட்விட்டரில், ‘டிஆர்எஸ் செயல் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்த சந்திப்பின் போது, முக்கிய தேசிய பிரச்சனைகள் தவிர கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். அவரின் விருந்தோம்பல் மற்றும் தோழமையால் நான் வியப்படைகிறேன்” என்று ட்வீட் செய்தார்.
முன்னதாக பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்த ராவ், "பாஜக-முக்த் பாரத்", (பாஜக இல்லாத இந்தியா) க்கு அழைப்பு விடுத்தார், நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள காவி கட்சியின் அரசாங்கம் தான் காரணம் என குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு... உஜ்பெகிஸ்தான் செல்கிறார் மோடி