தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் அவசியம்! - National girl child day 2022

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்களுக்கான உரிமை குறித்தும், அடிப்படை தேவை குறித்தும் நாம் பேசுவது அவசியமான ஒன்று.

தேசிய பெண் குழந்தைகள் தினம்
தேசிய பெண் குழந்தைகள் தினம்

By

Published : Jan 24, 2022, 11:51 AM IST

உலகத்தில் எந்த தேசத்தை நாம் எடுத்துக்காட்டாக கூறினாலும் சரி, நிச்சயம் அந்த தேசத்தில் இருக்கும் பெண்கள் தான் அதிக அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள். சாதி, சமய, மொழி பேதமின்றி பெண்கள் ஒடுக்கப்பட்டதை, ஒடுக்கப்படுவதை நாம் இன்று வரை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

எந்த தேசத்தில் பெண்களை தெய்வமாக பாவிப்பதாகவும், கண்களாக கருதுவதாகவும் கூறுகிறோமோ, அதே தேசத்தில் தான் பெண்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், பெண்களுக்கான உரிமை குறித்தும், அடிப்படை தேவை குறித்தும் நாம் பேசுவது அவசியமான ஒன்று. அப்படிபட்ட தினம் தான், தேசிய பெண் குழந்தைகள் தினம். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24ஆம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஏன் பெண் குழந்தைகள் தினம்?

பெண் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு தினம் வேண்டுமா என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். மொத்தமாக குழந்தைகள் தினம் என ஒரு நாள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறதே. எதற்காக பெண் குழந்தைகள் தினம்? என்னும் சந்தேகம் உதிக்கலாம். சொல்லப்போனால் இந்த தினம் கொண்டாடப்படுவதற்காக என்று சொல்வதை விட, பெண் குழந்தைகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை முன்வைக்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் இந்த தினம் நிச்சயம் வேண்டும்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் சார்பாக 2008ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24ஆம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திரா காந்தி முதன்முறையாக பிரதமராக பொறுப்பேற்றது 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதியில் தான்.

பெண் குழந்தைகள் நிலை

தேசிய அளவில் பெண் குழந்தைகள் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து விவாதித்தல், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கான ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தும் விதமாக தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தைகள் உரிமை மறுக்கப்பட்டது, பெண் சிசுவை கொலை செய்வது போன்ற செயல்கள் அரங்கேறின. இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று கூறினால், அது நம் அறியாமையை காண்பிக்கும்.

நாம் மேற்கூறிய வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட நம் தேசத்தில், ஒரு இடத்தில் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமைக்கு ஒரு பெண் குழந்தை ஆளாகி இருக்கும். இன்னும் நம் சமூகம் பெண் குழந்தைகள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு தீங்குகளை விளைவித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இல்லங்களில் தொடங்கும் ஏற்றத்தாழ்வு

பெண் குழந்தைகள் முதன்முதலில் சந்திக்கும் ஏற்றத்தாழ்வு அவர்கள் வீடுகளில் இருந்து தான் தொடங்குகிறது. ஆண் பிள்ளையை ஒரு விதமாகவும் பெண் பிள்ளையை வேறு விதமாகவும் நடத்துவதில், பெண் குழந்தைகள் மீது முதல் வன்முறையை அவர்களது பெற்றோர்களே செய்கின்றனர். உதாரணமாக விளையாட்டுப் பொருள்கள் வாங்கி கொடுப்பதில், நாம் காண்பிக்கும் பாரபட்சம் தான் அதன் தொடக்கப்புள்ளி. பெண் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கும் செப்பு சாமான்களில் இருக்கும் சமையல் பாத்திரங்கள் மூலமாக, நாம் அவர்களுக்கு சொல்கிறோம் உன்னுடைய பணி அடுப்பங்கறையிலேயே முடிந்து விடுகிறது என்று.

இன்றைக்கும் கூட பல வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு அலைபேசி, மடிக்கணினி என அனைத்தும் வாங்கி கொடுத்துவிட்டு, பெண் குழந்தைகளுக்கு அவை மறுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவில் கூட பாரபட்சம் காண்பிக்கும் தேசத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆம்! பல வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே சாப்பாட்டில் முட்டை பரிமாறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகமாக பாதிக்கப்படுவது பெண் பிள்ளைகள் தான்.

போற்றுதலை நிறுத்துவோம்!

பெண் பிள்ளை பிறந்தால் வீட்டுக்கு லக்ஷ்மி வந்ததாக அர்த்தம், பெண் குழந்தைகளே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டு வரும் தேவதைகள் என்று அவர்களை போற்றிப் பாடும் துதியை முதலில் நிறுத்துவோம். ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருப்பினும் சமமாக நடத்துவதில் தான் நம் தேசத்தின் சமநிலை இருக்கிறது. அதையே பெண் குழந்தைகள் தினமும் நமக்கு எடுத்துரைக்கிறது.

இதையும் படிங்க:98 வயதிலும் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாட்டி

ABOUT THE AUTHOR

...view details