டெல்லி:இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட் 2023 - 2024ஐ பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமனின் 5வது பட்ஜெட் தாக்கல் ஆகும். அதேபோல் வருகிற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், இது பிரதமர் மோடி தலைமையிலான இறுதி முழு பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்காக காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவரை மத்திய நிதியமைச்சர் உள்பட அரசு உயர் அலுவலர்கள் நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர், தனது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார். இதில் பேசிய அவர், “விவசாயிகளுக்கான கடன் 20 லட்சம் கோடி வழங்கப்படும். மீனவர்களுக்கு 6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிர்வாகங்களில் பலதரப்பட்ட படிப்புகள் உருவாக்கப்படும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் (National Digital Libraries) உருவாக்கப்படும்.