மும்பை :மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து அக்கட்சித்தொண்டர்கள் வீதிகளில் இறங்கி கடும்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத்தேர்தலுக்குப் பின்னர் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வந்தது. ஆட்சியைக் கைப்பற்ற சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து பாஜக, ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா ஒரு அணியை உருவாக்கியது.
தொடர்ந்து ஏக்நாத் சிண்டே கூட்டணியுடன் கைகோர்த்து மகாராஷ்டிர அரசியலைக் கைப்பற்றியது. தற்போது ஏக்நாத் சிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராகவும் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் தேசியவாத காங்கிரஸையும் கலக்கமடையச் செய்ய பாஜக திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவாருடன் பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அஜித் பவாரின் நடவடிக்கைகளும் மாநில அரசியலில் பல்வேறு கிளர்ச்சிகளை உருவாக்கி உள்ளன.
இந்நிலையில் மாநிலத்தில் அடுத்த பேரிடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்து உள்ளார். அவர் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகுவதாக மட்டுமே அறிவித்து உள்ளதாகவும், தீவிர அரசியலில் இருந்து அவர் விலகப்போவதாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.