டெல்லி: டெல்லியில், ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவண்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகையில், “நான் மனதின் குரல் பற்றிப் பேசும் போது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான அனுபவங்கள், நிறைவான வாழ்க்கை வாழும் உத்வேகத்தை அளிப்பது என்பதன் பெயர் தான் மனதின் குரல்.
பராக்கிரம தினம்
இன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி நாள். இப்போது, சில நாள்கள் முன்பாகத் தானே 2021ஆம் ஆண்டு தொடங்கியது என்று என்னைப் போலவே நீங்களும் சிந்திக்கிறீர்கள் தானே. ஜனவரி முழுவதும் கடந்து போய் விட்டது என்ற உணர்வே ஏற்படவில்லை; இதைத் தான் காலத்தின் ஓட்டம் என்கிறார்கள்.
சில நாள்கள் முன்பு தான் நாம் ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம், லோஹ்டி, மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்ந்தோம், ஆனால் இவை அனைத்தும் கடந்து போனதே தெரியாமல் கடந்து விட்டன. நாட்டின் பல பாகங்களிலும் பண்டிகைகளின் கோலாகலம் நிறைந்திருந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று நாம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை, பராக்ரம் திவஸ், அதாவது பராக்கிரம தினம் என்ற பெயரில் கொண்டாடினோம், ஜனவரி 26ஆம் தேதியான நமது குடியரசுத் தினத்தன்று கண்கொள்ளாக் காட்சியான அணிவகுப்பைக் கண்டு களித்தோம்.
பத்ம விருதுகள் அறிவிப்பு
இரு அவைகளின் கூட்டுத் தொடரின் தொடக்கமாக குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இவை அனைத்தின் இடையேயும், நாம் வெகுகாலமாகக் காத்திருந்த ஒரு விஷயம் நடந்தேறியது. அது தான் பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு. அசாதாரணமான செயல்கள் புரிந்துவருவோரின் சாதனைகள், மனித சமூகத்தின் பொருட்டு அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு கௌரவம் அளித்தது.
பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகச் செயலாற்றியவர்கள், தங்களின் செயல்களால் மற்றவர்களின் வாழ்க்கையில் நல்மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், நாட்டை முன்னேற்றியவர்கள் போன்றோருக்கு இந்த ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பத்ம விருதுகள் வாயிலாக கௌரவம் அளிக்கும் பாரம்பரியம், இந்த முறையும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நபர்களைப் பற்றியும், இவர்களின் பங்களிப்பு பற்றியும் நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்வதோடு, உங்கள் குடும்பங்களிலும் இவர்களைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுங்கள் என்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன். இவற்றால் அனைவருக்கும் எத்தனை உத்வேகம் ஏற்படும் என்பதை அப்போது நீங்களே உணர்வீர்கள்.