பிரபலங்களின் முகமாகவும் முகவரியாகவும் சமூக வலைதளமான ட்விட்டர் விளங்கிவருகிறது. முன்னணி அரசியல் தலைவர்கள் தங்கள் அறிவிப்புகளை ட்விட்டர் மூலமே மேற்கொண்டுவருவதால், அவர்களது ட்விட்டர் கணக்குகள் உலகளவில் பலராலும் பின்பற்றப்படுகின்றன.
அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு வன்முறையைத் தூண்டும்விதமான கருத்துகளைப் பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டு முடக்கப்பட்டது. நிகழ்கால அரசியல் தலைவர்களில் அதிகம் ஃபாலோயர்களை (பின்பற்றுபவர்கள்) டொனால்ட் ட்ரம்ப் கொண்டிருந்தார். ட்ரம்பை சுமார் 8.87 கோடி பேர் பின்பற்றிவந்தனர். அதற்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடியை 6.47 கோடி பேர் பின்பற்றிவருகின்றனர்.
தற்போது ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்டதால், நிகழ்கால அரசியல் தலைவர்களின் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நபராக நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனை 2.33 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.