புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குச்சென்று இலவசமாக மருத்துவம் பார்த்து பயனடைந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் அன்றாடப் பணிகளான சுத்தம் செய்தல், சமையல் வேலை, துணிகளை துவைத்தல் மற்றும் பார்பர் வேலை உள்ளிட்ட அன்றாடப் பணிகளில் சுமார் 550-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள அடிப்படை சம்பளமான 18 ஆயிரம், மற்றும் அகவிலைப்படி உயர்வு 6ஆயிரம் ரூபாய் என 24 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று 3ஆம் நாளாக ஜிப்மர் நிர்வாக அலுவலகம் முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.