கொல்கத்தா: நாரதா வெளியிட்ட அமைச்சர்கள் ஊழல் தொடர்பான காணொலி வழக்கில், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர், மாநில அமைச்சர்கள் இருவர் என நான்கு பேரை விசாரணைக்காக சிபிஐ அலுவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா்களுக்கு எதிராக சிபிஐ சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு, மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா் அனுமதியளித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போலி நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளுக்கு சாதகமாக நடப்பதாகக் கூறி, அவர்களிடம் லஞ்சமாகப் பணம் பெறும் காட்சிகள் 2016ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வெளியாகின.
இதனை ரகசிய நடவடிக்கையாக நாரதா இணையதள செய்தி நிறுவனம் படம்பிடித்து வெளிக்காட்டியது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இச்சூழலில் இந்தக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட போது மாநில அமைச்சர்களாக இருந்த திருணமூல் காங்கிரஸைச் சோ்ந்த ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சேட்டர்ஜி ஆகிய நால்வர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதன் அடிப்படையில் நால்வா் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.
இச்சூழலில், அந்த நால்வரையும் இன்று சிபிஐ அலுவலர்கள் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: முகம் மாறிய மேற்கு வங்கம்!