ஷியோபூர்:வனவிலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஓபன்-ஆஷா, எல்டான்-ஃபிரெட்டி ஆகிய சிவிங்கிப்புலி ஜோடிகள், மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள குனோ விலங்கியல் பூங்காவில் திறந்து விட்டப்பட்டன. இவற்றின் நடமாட்டத்தை அறிய அவற்றின் கழுத்தில், ரேடியோ காலர் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், விலங்கியல் பூங்காவில் இருந்து தப்பிய ஓபன் என்ற சிவிங்கிப்புலி அருகே உள்ள கிராமத்தில் சுற்றித்திரிவது தெரியவந்துள்ளது. குனோ விலங்கியல் பூங்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, ஜார் பரோடா கிராமத்தின் வயல் வெளியில், சிவிங்கிப்புலி உலா வருவதை அப்பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஜார் பரோடா கிராமத்துக்கு விரைந்துள்ள வனத்துறையினர் மற்றும் விலங்கியல் பூங்கா ஊழியர்கள், சிவிங்கிப்புலியை மீண்டும் பூங்காவுக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.