தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நாகா பேச்சுவார்த்தைகள் தோற்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்' - Nagaland 16-point agreement

தனி நாகா கொடி, தனி நாகா அரசியலமைப்புச் சட்டக் கோரிக்கையால் ஏற்படும் சச்சரவும், நாகாலாந்திற்கு வெளியே வசிக்கும் நாகா மக்களின் பகுதிகளில் நிலவும் அதிகார எல்லை மீறல்களும் பேச்சுவார்த்தைகளை நீரில் மூழ்கும் கப்பல்களாக்கிவிடும்.

நாகாலாந்து தனி நாடு பிரச்சினை  நாகாலாந்து சிறப்பு உரிமை  நாகாலாந்து 16 அம்ச ஒப்பந்தம்  Nagaland is a separate country issue  Nagaland Privilege  Nagaland 16-point agreement
Nagaland Issue

By

Published : Jan 6, 2021, 10:25 AM IST

இந்தியா-நாகாலாந்து சமாதானப் பேச்சுவார்த்தை பங்கேற்பாளரான ஆர்.என். ரவி 2019 ஜூலை 20 ஆம் தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டதும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்டதும், நாகா சமாதான முயற்சி ஓர் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. நாகாலாந்திற்கான தனி அரசியல் சட்ட அமைப்பு, தனிக்கொடி கோரிக்கை மீதான கடும் பிடிவாதத்தால், அமைதி உடன்படிக்கைக்கான கெடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது (முதல் கெடு 2019, அக்டோபர் 31 என்றும், இரண்டாம் கெடு 2020 செப்டம்பர் என்றும் விதிக்கப்பட்டது).

2020 டிசம்பர் 1அன்று ரவி தனது ஆளுநர் உரையில், தனி நாகா அரசியல்சட்ட அமைப்பு, தனிக்கொடிக் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இப்போது, அதீத நம்பிக்கையாளர்கள் மட்டுமே ஒரு நல்ல விளைவு உருவாகும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்.

நாகா உடன்படிக்கைகளின் தொடர்தோல்வியை உடனடியான அல்லது தனிப்பட்ட காரணங்களால் விளக்க முடியாது:

நாகா சமாதான முயற்சி 1995-லிருந்து தொடங்கியது. அப்போது, பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் பாரிஸில் என்எஸ்சிஎன் (ஐஎம்) தலைவர்களைச் சந்தித்தார். பின் அந்த முயற்சி ஒவ்வொரு அரசு வந்தபோதும் தப்பித்தப்பி பிழைத்தது. ஏ.பி.வாஜ்பாய் (13 நாள் அரசு), ஹெச். டி. தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், அதன்பின் தற்போதைய பிரதமர் மோடி ஆகியவர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது, சமாதான முயற்சி தொடர்ந்தது.

1986 ஜூன் 30 அன்று கையெழுத்தாகி வெற்றிபெற்ற மிசோரம் சமாதான உடன்படிக்கையோடு ஒப்பிடுகையில், நாகாலாந்து ஒப்பந்தத்தின் தோல்வி பூதாகரமாகத் தெரிகிறது. அக்பர் ஹைடரி உடன்படிக்கை (1947), 16 அம்ச உடன்படிக்கை (1960), ஷில்லாங் உடன்படிக்கை (1975) ஆகிய நாகா ஒப்பந்தங்கள் நிரந்தர அமைதியை உருவாக்கவே இல்லை. இந்தத் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை ஆராயும்போது, என்எஸ்சிஎன் (ஐஎம்) தலைமையின் முரண்பாட்டுத்தன்மை, ஜனநாயகப் பற்றாக்குறை ஆகியவற்றை மட்டுமல்ல, நீண்டகால அமைப்பியல் ரீதியான காரணங்களையும் சேர்த்தே ஆராய வேண்டும் என்பதைத்தான் இந்த நீண்ட தோல்வி கற்றுக்கொடுக்கும் பாடம்.

நாகா ஒப்பந்தங்களின் நிலையாமைக்கான, நீண்டகால அமைப்பியல் காரணங்கள்:

மூன்று நீண்டகால அமைப்பியல் காரணங்கள்தான் நாகா ஒப்பந்தங்களுக்கு ஒரு நோய்மையான நிலையாமையைப் பரிசளித்திருக்கின்றன.

முதலாவதாக, நாகா மக்களுக்குக் குறைவான அரசியல் உரிமைகளைத் தரும் தொடர் உடன்படிக்கைகளின் போக்குதான் ஒப்பந்தங்களை உருவாக்கியிருக்கிறது. அக்பர் ஹைடரி ஒப்பந்தம் ஒன்பது ஷரத்துகளின் மூலம் என்என்சியின் நீதித்துறை, நிர்வாக, சட்ட அதிகாரங்களை வரையறுத்தது.

நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலம் மற்றும் பல வளங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும், நில வருமானம், வரி ஆகியவற்றை விதிக்கவும், திரட்டவும், செலவழிக்கவுமான அதிகாரமும் என்என்சிக்குக் கொடுக்கப்பட்டன. தங்கள் இஷ்டப்படி முன்னேற நாகா மக்களுக்கு உரிமை உண்டு என்று தெளிவாகச் சொன்னது அந்த ஒப்பந்தம். மேலும் நாகா மக்களை எல்லாம் ஒரே நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டுவருவதின் அவசியத்தையும் அது வலியுறுத்தியது.

16 அம்ச உடன்படிக்கை நாகாலாந்திற்கு மாநில அந்தஸ்தைத் தந்தது. ஆனால், நிறைய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் ஷரத்துகளை இரண்டு பிரிவுகளில் பகுக்கலாம். இனம், கலாசாரம், மதம் ஆகியவற்றின் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை நாகா மக்களுக்கும் தந்தது முதல் பிரிவு. தங்கள் மதத்தை, பழக்க வழக்கங்களை அனுசரிக்கும் உரிமை, மலைவாழ் பழங்குடியினரின் நிலத்தை மாற்றுவதைத் தடுக்கக்கூடிய உரிமை, வழமையான சட்டங்களைக் கையாளுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமை ஆகியவை அந்த உரிமைகளுள் அடங்கும். மேலும் தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் நாகா மக்களுக்குக் கிடைத்தது. ஆனால், இவையெல்லாம் இந்திய தேசத்தை ஏற்றுக்கொண்ட எல்லாக் குடிமக்களுக்கும் கொடுக்கப்பட்ட உரிமைகள்தான். நாகா மக்களுக்கென்று விஷேசமானவை அல்ல. இரண்டாம் பிரிவு, இந்திய அரசாங்கத்திற்கும், நாகாலாந்திற்கும் இடையிலான விஷேச உறவை வலியுறுத்தும் ஷரத்துக்களைக் கொண்டது. ஆயுதப் போராட்டங்கள் தொடரும் வரை, நாகாலாந்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற தனது தனிப்பட்ட அறிவின்படி, செயல்படுவதற்கான சிறப்புரிமையை அது ஆளுநருக்குத் தந்தது. டியூயென்சாங் மாவட்டத்திற்கான சிறப்பு நிர்வாக உரிமையும் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மீதிருந்த ஒரே ஒரு கட்டுப்பாடு பிராந்திய சபை மட்டுமே. அது அவருக்குக் கீழ்நிலையில் இருக்கும் ஒரு துணை ஆணையரையே வெறும் கெளரவத் தலைவராகக் கொண்டிருந்தது. இந்த ஷரத்து அரசியல் சட்டத்தில், 1962 பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பிரிவு-2-ன்படி, (1.12.1963-லிருந்து நடைமுறைக்கு வருமாறு) சேர்க்கப்பட்டது. இது அரசியல் சட்டப்பிரிவு 371-ஏ என்றானது. இவ்வாறு நியமிக்கப்பட்ட அலுவலரான ஆளுநருக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமை அதிகாரத்தை, மீறிச் செயல்படும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு ஷில்லாங் ஒப்பந்தம் எந்தவிதமான உரிமைகளையும் கொடுக்கவில்லை. பிரதான ஒப்பந்தத்தின் ஷரத்து 3 (ii), மற்றும் இணைப்பு ஒப்பந்தத்தின் ஐந்து ஷரத்துகளும், ரகசிய கொரில்லாக்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவதற்கான நிபந்தனைகளையும், வழிமுறைகளையும் வகுத்தன.

இரண்டாவதாக, பல்வேறு பிரிவுகளின்மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாகா அரசியல் அமைப்பை 16 அம்ச ஒப்பந்தம் உருவாக்கியது.

1. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுபவர்கள் என்என்சி-யின் பிரதிநிதிகள் அல்ல. நாகா மக்கள் கன்வென்ஷனின் பிரதிநிதிகள்தான் என்று ஒப்பந்தம் வலியுறுத்தியது. இவ்வாறு அரசியல் சட்ட அமைப்பின் வரம்புகளுக்குட்பட்ட ஒரு சட்ட அரசியல் உருவானது. அதேவேளை, அந்தத் தீவிரவாத இயக்கம் ஒரு சட்ட, ஒழுங்கு பிரச்னை என்று அறிவிக்கப்பட்டது. அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டது. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (1958), நாகா பாதுகாப்புக் கட்டுப்பாடுச் சட்டம் (1962) ஆகியவற்றின் விளைவாக அந்தத் தீவிரவாத இயக்கம் தலைமறைவானது.

2. இந்த ஒப்பந்தம் நாகா மக்களை நிர்வாகரீதியாக நான்கு மாநிலங்களாகப் பிரித்தது.

3. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பும், பின்பும் மலைவாழ் பழங்குடி மற்றும் பிராந்திய முறைகளில் ஆசுவாசத்திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. 1964-க்குப் பின்பு, மாவட்டரீதியிலான ஆசுவாசப்படுத்தும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. டியூயென்சாங் மாவட்டத்தின்மீதான முழு நிர்வாக உரிமையை ஆளுநருக்குக் கொடுத்ததின் தர்க்கரீதியான விளைவுதான் இது. மலைவாழ் பழங்குடியியல் என்பது அரசியல் இலக்குகளை அடையப் பயன்படுத்தப்பட்டது. ஜெனரல் கைட்டோ கொலையின் எதிரொலியாக, மலைவாழ் பழங்குடியினரில் பல்வேறு கொலைகள் நிகழவும், என்என்சி-யில் இருந்த மலைவாழ் பழங்குடி சம்பந்தமான உட்கட்சிப் பூசல் ஓர் உச்சத்தை எட்டியது.

இந்தப் பேதங்கள் என்என்சிக்கான ஆதரவைச் சீர்குலைத்தன. அதனது சட்டப்பூர்வமான அங்கீகாரத்தையும் தகர்த்தன. ஒரு நிரந்தர அமைதிக்கு அவசியமான அகண்ட நாகாலாந்து என்ற பரந்தவொரு உடன்பாட்டைச் சாதிக்கும் சாத்தியத்தினையும் சாகடித்தன.

மூன்றாவதாக, 16 அம்ச ஒப்பந்தம் நாகாலாந்து மாநிலத்தை உருவாக்கியது. ஆனால், அதன் பலன்கள் மாநிலத்திற்கு வெளியே இருந்த நாகா மலைவாழ் பழங்குடியினரைச் சென்றடையவில்லை. விளைவாக, நாகா இயக்கத்தின் மைய ஈர்ப்புச்சக்தி, பெரும்பாலும் நாகாலாந்திற்கு வெளியே சினத்தோடு வாழ்ந்துகொண்டிருந்த மலைவாழ் பழங்குடியினரிடம் மடைமாறிப் போனது. பின்பு, 1980-ல் என்எஸ்சிஎன்(National Socialist Council of Nagaland) என்ற அமைப்பு திருவாளர்கள் முய்வா, ஐசக் ஸ்வூ, காப்ளாங் ஆகியோர் தலைமையில் உருவானது. இதற்கு என்ன அர்த்தம்? 16-அம்ச ஒப்பந்தம் தந்த உரிமைகள் சமாதானத்தை உருவாக்கப் போதவில்லை என்று அர்த்தம். சற்று யோசித்துப் பாருங்கள். 1986-ல் இந்தியாவின் 23-ஆவது மாநிலமாக மிசோரம் உருவாக்கப்பட்டபோது, லுஷை மலைவாழ் பழங்குடியினரை மட்டும் விலக்கி வைத்திருந்தால், மிசோரம் ஒப்பந்தத்தின் விதி அல்லது கதி என்னவாகியிருக்கும்?

இன்றைய சமாதான முயற்சியின் மேல் விழும் 16-அம்ச ஒப்பந்தத்தின் நிழல்:

2015 ஆகஸ்ட் 3ஆம் தேதி கையெழுத்தான ஃபிரேம்வொர்க் ஒப்பந்தம், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பேச்சுவார்த்தையின் இரண்டு படிநிலைகளை எடுத்துக்காட்டுகிறது. முதலாவது படிநிலை இரண்டு அமைப்புகளுக்கிடையிலான இறையாண்மைப் பகர்வைக் கையாள்வது பற்றியது. இது விஷேசமான நாகா கொடி, மற்றும் நாகா அரசியலமைப்புச் சட்டம் என்ற தகராறு நிரம்பிய பிரச்னையையும் உள்ளடக்கியது. இரண்டாவது படிநிலை, மத்திய அரசின், மற்றும் நாகாலாந்தின் ஆட்சி நிர்வாக அமைப்புகளின் உரிமைகளை, அதிகார எல்லைகளை வகுப்பது பற்றியது. இது, நாகாலாந்திற்கு வெளியே நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கான சிறப்பு நிர்வாக ஏற்பாட்டையும் உள்ளடக்கியது.

பகிர்ந்துகொள்ளும் இறையாண்மை மீதான பேச்சுவார்த்தைகள், விஷேசமான நாகா கொடி, நாகா அரசியலமைப்புச் சட்டம் என்ற பிரச்னையால் தடுமாறின. ஆர்.என். ரவி, 2019 மத்தியிலிருந்து மீண்டும் மீண்டும் இக்கோரிக்கை மீதான தன்வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 2020 டிசம்பர் 1ஆம் தேதி இக்கோரிக்கையை முற்றிலும் நிராகரித்த அவரது பேச்சு அவரது வெறுப்பின் வெளிப்பாடுதான் அல்லது நிலைப்பாடுதான். 2020 பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஆளுநர் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், தலைமறைவு இயக்கங்களில் இருக்கும் மாநில அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவுக்காரர்கள் பற்றிய தரவுப்பட்டியலைக் கேட்டிருக்கிறார். முதலமைச்சருக்கு அனுப்பிய 2020 ஜூன் 16 தேதியிட்ட கடிதத்தில், மோசமாகிக் கொண்டிருக்கும் சட்ட ஒழுங்கை சுட்டிக்காட்டி, சட்டப்பிரிவு 371 (ஏ) ஷரத்து (1) (பி)-யின் மூலம், மாவட்ட அளவிலான சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் அலுவலர்களை அமர்த்தவும், மாற்றவும் தேவைப்படும் அதிகாரத்தைத் தான் எடுத்துக் கொள்ளப் போவதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

ஆயுதமேந்திய குழுக்கள் மீதான ஆளுநரின் வெறுப்பு, இரண்டு நிஜங்களுக்கு முரணானது. பேச்சுவார்த்தைகளுக்கு முன்பே இந்தக் குழுக்களின் இயல்பு பற்றி மத்திய அரசுக்குத் தெரியும் என்பது முதல் நிஜம். மரியாதைக்குரிய ஆளுநரே, 2020 அக்டோபர் பிற்பகுதியில் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், சில ஆயுதக்குழுக்களின் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டிருந்தார் என்பது இரண்டாம் நிஜம். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் கட்சியைச் சட்டத்திற்கு வெளியிலான ஆயுதக்குழு என்று வர்ணிப்பது, பொதுமக்களின் தொடர்பைக் கத்தரிப்பது, அரசியல் லாபத்திற்காக நாகா குழுக்களின் பேதங்களை பயன்படுத்துவது – இவையெல்லாம், 16-அம்ச ஒப்பந்த நாட்களிலிருந்து நிலவிய அதிகார மனப்போக்கின் விளைவுகள்தான்.

அதிகார வரம்புகள் மீதான பேச்சுவார்த்தைகள் ஓரளவு நன்றாகத்தான் நடந்தேறியிருக்கின்றன. இருசாரருக்குமே பேச்சுவார்த்தைகள் திருப்தியாக முடிந்தன என்று 2019-லிருந்தே மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறார்கள். ஆனால், முடிவுகளை நடைமுறைப்படுத்தும்போது, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொந்தளிப்பு ஏற்படும். அருணாலப் பிரதேசத்திலும் மணிப்பூரிலும் குடிமைச் சமூகக் குழுக்கள் பலதடவை தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. மணிப்பூர் அரசாங்கம், 2020 ஆகஸ்ட் 18 தேதியிட்ட பத்திரிகைச் செய்திக்குறிப்பில், 'அருணாச்சலப் பிரதேசத்திலும், மணிப்பூரிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியல் விதிகளின்படி இரண்டு சுயாட்சி மாவட்டச் சபைகளை அமைக்கும் திட்டம்' பற்றி இந்திய அரசோடு விவாதித்ததை மறுத்திருக்கிறது. மேலும், 'ஒப்பந்த வரைவின் பிரதியை, ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பாகவே தனக்கு அளிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தனது கருத்துகளைச் சொல்ல முடியும் என்றும், அந்த மாநில அரசு உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது'.

நிர்வாக அலகுகளை மறுவரைவு செய்ய முனையும் கருத்துகளுக்கு எதிரான உணர்வுப்பூர்வமான எதிர்வினை என்பது, நிலப்பகுதிகளை இனமயமாக்கும் செயல்முறையின்படி, குறிப்பிட்ட இனமக்களை குறிப்பிட்ட பூகோளப் பகுதிகளில் குடியமர்த்திக் கட்டிப்போடும் காலனிய நிர்வாகத்து அல்லது புவியியல் வரைபடத்து தொடர்முயற்சியின் விளைவுதான். 'Inner Line Permit' (உள்ளே வர அனுமதி) போன்ற நிர்வாகக் கருவிகளின் மூலம்தான் இனம்சார் தாய்நிலங்கள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து தக்கவைக்கப்பட்டன. வடகிழக்கு மாநிலங்களின் விஷயத்தில், இந்த 'Inner Line Permit' போன்ற நிர்வாகக் கருவிகள் சட்டப்பிரிவு 371-ல் சேர்க்கப்பட்டன.

இந்தச் சட்டப்பிரிவின்படி பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரானப் போராட்டத்தின்போது, வெளியாட்கள் வந்து தங்குவதையும், சொத்து வாங்குவதையும் தடுத்து உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு இதுவரை கொடுக்கப்படாத மணிப்பூர் பள்ளத்தாக்கு, மேகாலய போன்ற பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது.

இனம்சார் தாய்நிலங்கள்மீது கட்டமைக்கப்பட்ட இந்தக் காலனிய கட்டுமானத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சட்டப்பிரிவு 371-ன் இனப்பாதுகாப்புக் கருவிகளால், வடகிழக்கில் இருந்த பல்வேறு தனித்த, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இனங்கள் சிதறிப்போய், ஒவ்வொன்றும் தனியின நாடு கேட்டும் தீவுகளாக துண்டாடப்பட்டன.

இந்தப் போக்குதான் நாகா-கூகி இனச்சண்டையிலும், மணிப்பூரில் நடக்கும் நாகா-மெய்டெய் நில உரிமைச் சண்டையிலும் நோய்மையோடு காணப்படுகிறது. அதனால்தான் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமிற்கும், நாகாலாந்திற்கும் இடையில் அல்லது மிக அண்மைக்காலத்தில் அஸ்ஸாமிற்கும் மிசோரத்திற்கும் இடையில் எல்லைச் சண்டைகள் அடிக்கடி வன்முறையில் முடிகின்றன. ஆயினும், இந்த வலிமையான இனப்போராட்டங்களால் தைரியமடைந்த மத்திய அமைப்புகள் இனங்களை மோதவிட்டு அவர்களின் அரசியல் ஆசைகளை சிதைத்து விடுகின்றன.

சச்சரவுகளும், சமாதானத்தின் சாத்தியமும்

தனி நாகா கொடி, தனி நாகா அரசியலமைப்புச் சட்டக் கோரிக்கையால் ஏற்படும் சச்சரவும், நாகாலாந்திற்கு வெளியே வசிக்கும் நாகா மக்களின் பகுதிகளில் நிலவும் அதிகார எல்லை மீறல்களும் பேச்சுவார்த்தைகளை நீரில் மூழ்கும் கப்பல்களாக்கிவிடும். 2020 அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு நேர்காணலில், தனிக்கொடியை, தனி அரசியல் சட்டத்தைச் சேர்க்காத ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்எஸ்சிஎன் (ஐஎம்) பொதுச் செயலாளர் முய்வா. பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கும்முகமாக அந்த இயக்கத்தைத் தவிர்ப்பது உசிதமல்ல. அருணாச்சலம், அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நாகா மக்களுக்கு எந்தவிதமான பலன்களையும் தராமல் நாகாலாந்திற்கு வெளியே அதிகார எல்லைகளை வகுப்பதில் உள்ள சிரமங்கள் சமாதானத்தின் சாத்தியத்தைச் செல்லரித்துவிடும்.

அதிருப்தியான என்எஸ்சிஎன் (ஐஎம்) என்பது பெரிய ஆபத்து. அந்த இயக்கம் மறுபடியும் 1980களின் பாணிக்குத் திரும்பிவிட்டால், அந்தப் பகுதியில் ராணுவ நடமாட்டத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிவரும். அதனால் மிகவும் கொண்டாடப்பட்ட, தலைமறைவுத் தலைவர்களின் சரணாகதியின் பலன்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். சீனா ராணுவப் படைகள் டொக்லாமிலும், அருணாச்சலத்திலும் குவிந்துவரும் நேரத்தில் இந்தமாதிரியான அரசியல் சூறாவளியைத் தவிர்ப்பது நல்லது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

தனிக்கொடிக் கோரிக்கை இந்திய இறையாண்மைக்குச் சவால் அல்ல. இப்படிக் கோருவதில் நாகா முதல் இனம் அல்ல. இப்போது விலக்கப்பட்ட ஜம்முக் காஷ்மீர் கொடியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், தமிழ்நாடு 1970-ல் தனிக்கொடியை முன்மொழிந்திருக்கிறது. கர்நாடகா 2018-ல் அதைப் போல ஒரு திட்டத்தைச் சொன்னது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் 2019-ஆம் ஆண்டில் அது கைவிடப்பட்டது. ஒரு மாநிலம் தனிக்கொடி வைத்துக் கொள்வதில் சட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எஸ்.ஆர். பொம்மை-இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பால்டிக் தேசங்களின் வரலாறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், சுதந்திர இந்தியாவில் பிராந்திய அரசியல் உணர்வுகளுக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்திருக்க முடியும் என்று பேராசிரியர் பார்த்தசாரதி குப்தா சொல்லியிருக்கிறார்.

வடகிழக்கு மாகாணங்களில் பல இனங்கள் கொள்ளும் நிலஉரிமைச் சச்சரவுகளைத் தணிப்பதற்கு, ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் 'பாஸ் ஸ்டேட்' அல்லது 'ஸ்விஸ் தேசப்பிரிவுகளின் கூட்டமைப்பு' என்பதின் இயக்கத்தைக் கற்றுத்தேர்வது நல்லது.

பரஸ்பரப் பொறுமை, அனுமதி ஆகியவற்றால் சாத்தியமான பன்முகத்தன்மையான ஒரு தேசத்தை நிர்மாணிப்பதில், தெளிவான சமூகக் குழுக்களைச் சேர்ந்த அரசியல் மேல்தட்டு மக்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். சிறப்பான அந்த அரசியல் அமைப்பிற்கு 'கான்சோஷியேஷனல் ஸ்டேட்' என்று பெயர். எல்லாச் சமூக இனங்களும் அதிகாரப் பகிர்வு கொள்ளும் ஓர் அமைப்பு என்பது அதன் அர்த்தம். இதைக் கடைப்பிடிப்பது நெதர்லாந்தும், ஸ்விட்சர்லாந்தும். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் நிறையவே இருக்கின்றன. ஊத வேண்டிய சங்கை ஊதிவிட்டேன்.

(இக்கட்டுரை தொடர்பான அனைத்து உள்ளீடுகளும் குமார் சஞ்சய் சிங் என்னும் கட்டுரையாளருக்குச் சொந்தமானது. முகவரி: குமார் சஞ்சய் சிங், இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை சுவாமி ஷர்த்தானந்த் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம்)

இதையும் படிங்க:நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதத் தூண்டியது எது?

ABOUT THE AUTHOR

...view details