மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
மைசூரு, சாமுண்டி மலை அருகே தனது ஆண் நண்பருடன் சாமுண்டி மலைக்குச் சென்று விட்டு அப்பெண் திரும்பிய நிலையில், மது அருந்தி விட்டு அவ்வழியே சென்ற கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து, பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
5 பேர் கைது
இப்பிரச்சினை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக ஹால்நள்ளி காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரித்து, 84 மணிநேரத்திற்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் உள்பட ஐந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில் அந்த பெண்ணை பணையம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே தோழரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
தலைமறைவு - கைது
இந்த குற்றச்செயலில் அவர்களுடன் மேலும் இருவர் ஈடுபட்டதாக கூறிய நிலையில், அதில் ஒருவரை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நள்ளிரவு காவல்துறையினர் கைது செய்தனர்.
நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த ஏழாவது குற்றவாளியை நேற்று (செப். 7) தனிப்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக காவலில் எடுக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.