மைசூரு (கர்நாடகா):உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஸ்ரீ ராம ஜென்ம அறக்கட்டளை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தீவிர பணியில் இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மைசூரு சிற்பியின் சிலை ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹெச்டி கோடே தாலுகாவின் குஜ்ஜிகவுடனபுராவில் கண்டறியப்பட்ட கிருஷ்ணா சிலையின் மூலம் இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது அதே பகுதியைச் சேர்ந்த ராம்தாஸ் என்பவருக்குச் சொந்தமான விளைநிலம் ஆகும். இவ்வாறு 2023 பிப்ரவரியில் கண்டறியப்பட்ட கிருஷ்ணா சிலையை தோண்டி எடுப்பதற்கு, ஸ்ரீனிவாஸ் என்பவர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சிற்பி அருண் யோகிராஜின் தந்தைக்கு நிலத்தின் உரிமையாளர் ராம்தாஸ் தகவல் அளித்துள்ளார். பின்னர், அங்கு விரைந்த மைசூரு சிற்பியான அருண் யோகிராஜ் மற்றும் அவரது குழுவினர், கிடைக்கப் பெற்ற கிருஷ்ணா சிலை கல்லை ராமர் சிலை வடிவமைப்பதற்கு உகந்ததாக இருக்கும் என முடிவெடுத்தனர்.
இருப்பினும், இதனை மேலும் உறுதிபடுத்துவதற்காக மனயா படிகர் மற்றும் சுரேந்திர ஷர்மா ஆகிய இரு சிற்பிகளுக்கும் அருண் யோகிராஜ் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். இதன்பேரில் அங்கு சென்ற இருவரும், கிடைத்த கிருஷ்ணா கல்லை ஆராய்ந்து, இது சிலை வடிப்பதற்கு உகந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய சுரங்கத்தின் குத்தகைதாரர் ஸ்ரீனிவாஸ், “2023 பிப்ரவரி 9 அன்று, 17 டன் எடையுள்ள 5 கிருஷ்ணா சிலை கற்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த கற்கள் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் ஆகிய சிலைகள் செதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனை நான் இலவசமாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பினேன்” என்றார்.
மேலும், இது தொடர்பாக பேசிய சிற்பி அருண் யோகிராஜின் சகோதரர் சூர்யபிரகாஷ், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு எனது சகோதரரால் கிருஷ்ணா சிலை கல்லில் இருந்து செதுக்கப்பட்ட ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது, எனக்கு பெருமையாக உள்ளது. இது ஒரு சிற்பிக்கு தனது வாழ்நாளில் கிடைக்கும் அரிய வாய்ப்பு ஆகும், ஆனால் அது எனது சகோதரருக்கு கிடைத்தது” என்றார்.
அதேநேரம், அந்த கிருஷ்ணர் சிலை கல்லில் உள்ள சிறப்பு என்ன என்பது குறித்து பேசிய சூர்யபிரகாஷ், “ஹெச்டி கோடே பகுதியில் கிடைத்த கிருஷ்ணா சிலை கல்லானது, பொதுவாக பாலபடா கல்லு (சோப் கல்) என அழைக்கப்படுகிறது. இந்த கல் 9*9 அல்லது 1*1 என்ற அளவிலே கிடைக்கும். பாலபடா கல், மிகவும் மென்மையாக மற்றும் செதுக்குவதற்கு ஏதுவாக இருக்கும். அதே போன்றுதான் கிருஷ்ணா சிலையும் இருந்தது. கிருஷ்ணா என்றால் நீல நிறம்.
கிருஷ்ணா சிலையானது அமிலம், தண்ணீர், நெருப்பு, அழுக்கு ஆகியவற்றை உள்வாங்காத தன்மை கொண்டது. அது மட்டுமல்லாமல், இது இரும்பை விட மிகவும் வலிமைமிக்கது. இந்த கற்கள் பூமிக்கு அடியில் 50 முதல் 60 அடி ஆழத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. எங்களிடம் பேலூர், ஹலெபிடு மற்றும் சோம்நாத் கோயில் ஆகியவற்றின் சிற்பிகள் இருந்தனர். இந்த சிலைக் கல்லை பார்த்த பிறகு, அதற்கு எந்த சேதமும் இல்லாமல் மண்ணில் இருந்து பிரித்து எடுத்தோம்” என தெரிவித்தார்.
மேலும், இவரது தாத்தா மைசூரு பேலஸில் உள்ள சாமுண்டீஸ்வரி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் காயத்ரி தேவி கோயில்களில் உள்ள சிலைகளை செதுக்கியுள்ளதாகவும், 5 தலைமுறைகளாக சிலை செதுக்கும் தொழிலை இவர்கள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் : பூஜைகள் தொடக்கம்! ஒவ்வொரு நாளும் என்னென்ன வழிபாடுகள் தெரியுமா?