பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் முதன்முறையாக அல்சூர் ஏரி கரை அருகே உள்ள தமிழ்ச் சங்கத்தின் வளாகத்தில் இன்று தொடங்கி 8 நாட்களுக்கு தமிழ் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
கர்நாடகா தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தன. இதனை இன்று அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை துவங்கி வைத்தார். 25 புத்தக பதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த தமிழ்ப் புத்தக விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து தமிழில் பேசிய சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் தனது தொகுதியில் அதிக தமிழர்கள் இருப்பதால் அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக அவர்களது தாய்மொழியில் பேசுவதற்காக தான் தமிழை கற்றுக் கொண்டதாக கூறினார். பின்னர் அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ”உலகம் முழுவதும் அறிவியல் மாநாட்டிற்குச் செல்லும்போது நம் சாதனையை குறித்து அனைவரும் கேள்வி எழுப்பும்போது தமிழ் தாய் மொழியில் கற்றதால் சாதனைகள் எளிதானது” எனக் கூறினார்.
மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் இப்புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் 20 மாணவர்களுக்கு அன்பளிப்புச்சீட்டை மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் வழங்கினர்.
பெங்களூரு நகரில் முதன்முறையாக நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழா மூலமாக தங்களுக்கு விரும்பிய தமிழ் புத்தகங்களை வாங்க, மிகவும் பயனுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சிகளில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழுணர்வை ஊக்குவிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ - மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் சிவாஜி நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், அணு விஞ்ஞானி தவமணி, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ராம் பிரசாத் மனோகர், பேராசிரியர் வணங்காமுடி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:பான் - ஆதார் இணைப்பு: வருமான வரித்துறை வார்னிங்!