டெல்லி: வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 65-வது நிறுவன நாள் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பின் கடத்தல் தடுப்பு அறிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2021-22ஆம் ஆண்டில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான 833 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு சராசரியாக 800 கிலோ தங்கம் கடத்தப்படுவதாகவும், கடத்தல்கள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
வணிக மோசடி, சர்வதேச அமலாக்க நடவடிக்கை மற்றும் கரோனாவுக்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடு தளர்வுகளால் அதிகரித்து வரும் கடத்தல் குறித்து அறிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். கடந்த 2020-21 மற்றும் 2021-22 காலகட்டத்தில் மட்டும் மியான்மர் பிராந்தியத்தில் இருந்து மட்டும் 37 சதவீதம் என்ற உச்சபட்ச அளவில் தங்க கடத்தல் நடந்திருப்பதாகக் கூறினார்.