டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக எழுந்த புகாரில், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் கடந்த மாதம் 20-ம் தேதி, அஸ்ஸாம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏப்ரல் 25-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வெளியே வந்த அவரை, போலீசார் மீண்டும் கைது செய்தனர். போலீசாரை தாக்கியதாக பெண் போலீஸ் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில் மேவானி கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஜாமீன் கிடைத்ததால், ஜிக்னேஷ் மேவானி விடுவிக்கப்பட்டார்.
என்னைக் கைது செய்தது பிரதமர் அலுவலகத்தின் திட்டமிட்ட சதி - ஜிக்னேஷ் மேவானி
அஸ்ஸாம் போலீசார் தன்னைக் கைது செய்தது முன்கூட்டியே திட்டமிட்ட சதி என்றும், இதன் பின்னணியில் பிரதமர் அலுவலகம்தான் இருக்கிறது என்றும் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்று (2-5-2022) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜிக்னேஷ் மேவானி, "அஸ்ஸாம் போலீஸ் முன்கூட்டியே திட்டமிட்டு என்னைக் கைது செய்தது. இந்த சதித்திட்டத்திற்கு பின்னணியில் பிரதமர் அலுவலகம்தான் இருக்கிறது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, என்னை அழிக்கவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரு எம்எல்ஏவை கைது செய்வதற்கான எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. எனது கைது ஒரு கோழைத்தனமான செயல். இது குஜராத்தின் பெருமையை குலைத்துவிட்டது. என் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன். 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம், முந்த்ரா துறைமுகத்தில் கோடிக்கணக்கான மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து, ஜூன் 1-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவுள்ளோம்" என்று தெரிவித்தார்.