முசாபர் நகர் (உத்தரப்பிரதேசம்):உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள குபாபூர் கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் திரிப்தி தியாகி (Tripti Tyagi) என்ற ஆசிரியை, 2ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரை வீட்டுப்பாடம் செய்யாததற்காக சக மாணவர்களைக் கொண்டு அறையச் சொல்லும் வீடியோ ஒன்று நேற்று முதல் வைரலானது.
இதற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், வீடியோ ஆதாரம் மூலம் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பள்ளி ஆசிரியை திரிப்தி தியாகி மீது முசாபர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். ஆனால், இந்த வழக்கு எந்தெந்த பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், தான் மாற்றுத்திறனாளி என்பதால் வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை எழுந்து சென்று தண்டிக்க முடியவில்லை என்றும், அதனாலேயே சக மாணவர்களைத் தண்டிக்கக் கூறியதாகவும் ஆசிரியர் திரிப்தி தியாகி கூறி உள்ளார். மேலும், இந்த வீடியோ திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் ஆசிரியை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “பாஜக-ஆர்எஸ்எஸ்-இன் வெறுப்பு நிறைந்த அரசியலின் முடிவாகவே இந்த உத்தரப்பிரதேச பள்ளியில் நிகழ்ந்த மதப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட சம்பவத்தில் ஆசிரியையின் குணம் வெளிப்பட்டு உள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. எந்த விதமான மதவெறியும், வன்முறையும் நாட்டுக்கு எதிரானது. குற்றம் செய்தவர்களை விடுவிப்பதும் நாட்டுக்கு எதிரானது” என குறிப்பிட்டு உள்ளார்.