லக்னோ (உத்தரப் பிரதேசம்): பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுவோருக்கான சிவில் உரிமைகளை நிலைநிறுத்தும் தனிச்சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இந்தச் சட்டங்களை இணைத்து, அனைவருக்கும் ஒரே விதமான சிவில் சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதனால் தற்போதுள்ள மத உரிமைகள் பாதிக்கப்படும் என்றும், இதுபோன்ற இணைப்பு சாத்தியமில்லை என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன. பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயலும் பாஜகவுக்கு அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் ஹஸ்ரத் மௌலானா, "இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத உரிமைகளை அளித்துள்ளது.
அதன்படி அனைவரும் அவர்கள் விரும்பிய மதங்களை பின்பற்றி வாழ்வதற்கான தனிச்சட்டங்கள் உள்ளன. ஏற்கனவே அமலில் உள்ள இந்த தனிச்சட்டங்கள் நாட்டுக்கு எந்தவித இழப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தத் தனிச்சட்டங்கள் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையையும், பரஸ்பர நம்பிக்கையையும் பராமரிக்க உதவியது.
இப்போது உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது, சிறுபான்மையினருக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான நடவடிக்கை. பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவே, பாஜகவினர் பொது சிவில் சட்டம் குறித்து பேசி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் அழிந்துவரும் கடல்வாழ் உயிரினமான திமிங்கல சுறா உயிரிழப்பு