ஹரியானா:அழகிலும், பால் உற்பத்தியிலும் பெயர் பெற்றது முர்ரா வகையைச் சேர்ந்த எருமை என கூறப்படுகிறது. இந்த இனத்தை சேர்ந்த ஹரியானாவில் உள்ள எருமை, நாள் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 15 லிட்டர் பால் கொடுப்பதுடன் பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வாரிக் குவித்துள்ளது. அங்குள்ள பிவானி மாவட்டத்தில் உள்ள இந்த முர்ரா வகையைச் சேர்ந்த எருமை, அந்த மாநிலம் முழுவதும் தனக்கென ஏராளமான ரசிகர்களைக் கொண்டு பிரபலமாகி இருக்கிறது.
தர்மா என அதன் உரிமையாளரால் பெயர் சூட்டப்பட்டு அன்போடு வளர்க்கப்படும் தர்மாவுக்கு தற்போது 3 வயதாகும் நிலையில் அவளுக்கும் ஒரு குழந்தையாகக் குட்டி கன்று ஒன்று பிறந்திருக்கிறது. இந்த தர்மாவை அதன் உரிமையாளர் சஞ்சய் சிறு வயதில் இருந்தே வளர்த்து வரும் நிலையில், நாள்தோறும் அதற்குப் பச்சை புல், பருத்திக் கொட்டை உள்ளிட்ட பல கொட்டை வகைகள் மற்றும் சுமார் 40 கிலோ வரை பச்சை கேரட் உள்ளிட்ட பலவற்றை உணவாகக் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த தர்மா தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 15 லிட்டர் பால் கரக்கும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற எருமை அழகிப் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தன் சொந்த ஊரில் மட்டும் பிரபலமான தர்மா, தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறாள். இந்நிலையில் இந்த தர்மாவை சுமார் ரூ.61 லட்சம் கிடைத்தால் விற்றுவிடத் தயாராக உள்ளதாகவும் அதன் உரிமையாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.