அகமதாபாத்:பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய முன் தினம், அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (டிச.29) அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று (டிச.30) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவை ஒட்டி, பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார். அங்கு அவரது சகோதரரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஹீராபென் உடலுக்கு, பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு:பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை, இந்திய இலட்சியங்களின் அடையாளமாகும். பிரதமர் மோடி தனது வாழ்க்கையில் ஹீராபென்னின் மதிப்புகளை உள்வாங்கினார். அவரது புனித ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா:பிரதமர் நரேந்திர மோடியின் மதிப்புக்குரிய அம்மா ஹீராபென்னின் மறைவு குறித்து அறிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையின் முதல் நண்பன் மற்றும் ஆசிரியை அம்மா. இது சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகப்பெரிய வலி ஆகும். குடும்பத்தை வளர்ப்பதற்கு ஹீராபென் எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகும். அவரது தியாகத் துறவு வாழ்க்கை என்றும் நம் நினைவில் இருக்கும். இந்த துயர நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:ஹீராபென் மோடியின் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைகிறேன். நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தனது அன்பான தாயின் இழப்பில், இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களது முழு குடும்பத்துடன் உள்ளன.
ராகுல் காந்தி எம்பி:பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் மரணச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:வீடியோ: தாயின் உடலை தோளில் சுமந்துசென்ற பிரதமர் மோடி