மும்பை: இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மின்னஞ்சலுக்கு கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்ததால், மும்பை மற்றும் வெளிநாட்டில் இருக்கும் வீட்டிற்கும் Z+ பாதுகாப்பு போடப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை அச்சுறுத்தும் விதமாக கடந்த வாரத்தில் இரண்டு முறை பல கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்த நிலையில் இன்று மீண்டும் அதே மின்னஞ்சலுக்கு மூண்றாவது முறையாக மர்ம நபரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.
அந்த இமெயிலில், “ நீங்கள் எங்களுக்கு 400 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் எங்களிடம் இந்தியாவிலயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கொலை மிரட்டல் விடப்பட்ட போதே வழக்கு பதிவி செய்துள்ளோம்.
மேலும், கொலை மிரட்டல் விடுத்த நபரை பிடிப்பதற்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கம்தேவி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மும்பையின் மூத்த காவல்துறை அதிகாரிகள் முகேஷ் அம்பானியில் இல்லமான ஆன்டிலியாவுக்குச் சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல்: முன்னதாக கடந்த அக் 27ம் தேதி மர்ம நபர் மூலம் ரூபாய் 20 கோடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என அதில் தெரிவித்திருந்தது. இது சம்பந்தமாக முகேஷ் அம்பானி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், கடந்த 28ம் தேதி அதே நபரிடம் இருந்து 20 கோடி வேண்டாம் 200 கோடி ரூபாய் தரவேண்டும். மேலும், பணம் தர மறுத்தால் குடும்பத்தை கொன்று விடுவோம் என அனுப்பப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தனர்.
அரசுக்கு 40 லட்சம் கட்டணம்: ஏற்கனவே மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள வீட்டிற்கும் தற்போது Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது . Z+ பாதுகாப்பிற்காக அரசிற்கு முகேஷ் அம்பானி 40 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:"குஜராத் முதலமைச்சராக மாநில உரிமை குறித்து பேச்சு.. பிரதமரானதும் மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு" - ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!