மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து அவரது மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் அளித்த புகாரில், மும்பை போலீசார் பஞ்சாப் ராப் பாடகர் சித்து மோஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சல்மான் கான் வீடு முன் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து கடந்த 18ஆம் தேதி மின்னஞ்சல் வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மிரட்டல் மின்னஞ்சலை கண்டு அதிர்ந்து போன சல்மான் கானின் மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கர், நேற்று (மார்ச்.19) புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். பிளாக்பக் வகை மானை சுட்டுக் கொன்று தங்களது சமுதாயத்தின் நம்பிக்கைகளை சல்மான் கான் அவமரியாதை செய்ததாகவும், அவர் மற்றும் சல்மான் கானின் தந்தை சலீம் கானின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.