மும்பை:பீகார் மாநிலம் பகல்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாடலிங் துறையில் பணி புரிந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் வசித்து வரும் இந்த பெண், தற்போது மும்பையிலேயே பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண் தன்னை ஒருவர் வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், அதேநேரம் மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இயங்கி வரும் யாஷ் மாடல் நிறுவனத்தில் மாடலிங்காக இருந்தேன். நான் அங்கு ஒன்றரை ஆண்டுகள் வரை பணி புரிந்தேன். அப்போது யாஷ் மாடல் நிறுவனத்தின் இயக்குனர் தன்வீர் அக்தர் கான் எனக்கு அதிகப்படியான தொல்லைகள் கொடுத்தார்.
அவ்வாறு எனக்கு தொல்லைகள் கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னை திருமணம் செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தினார். எனவே, நான் அந்த நிறுவனத்தை விட்டு நேராக பகல்பூருக்குச் சென்றேன். பின்னர், எனது பணி நிமித்தத்திற்காக மும்பைக்கு வந்து, வெர்சோவா பகுதியில் வாழ்ந்து வருகிறேன்.
ஆனால், தன்வீர் அக்தர் கான் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தே வந்தார். அதிலும், மும்பைக்கே வந்து எனக்கு தொல்லை கொடுத்தார். மேலும், என்னை மதம் மாற வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். அதை நான் மறுத்தேன். ஆகவே, என்னை கொல்வதற்கான முயற்சிகளிலும் தன்வீர் கான் ஈடுபட்டார்.