மும்பை: மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை மே3ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால் ஒவ்வொரு மசூதி முன்பும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் ஹனுமன் சாலிஸா ஓதுவார்கள் என ராஜ் தாக்கரே அதிரடியாக அறிவித்தார்.
இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் தனது முடிவை ராஜ் தாக்கரே மாற்றியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் இன்று (மே2) பகிர்ந்துள்ள அறிக்கையில் மகா ஆரத்தி நிகழ்வு மற்றும் ஹனுமன் சாலிஸா ஓதுவதை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
அதில், “நாளை (மே3) ரம்ஜான் என்பதாலும் அக்ஷய திருதியை மற்றும் பரசுராமர் ஜெயந்தி என்பதாலும் பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே இன்று (மே2) இரவுக்குள் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா காவல்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் (Dilip Walse Patil) காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.