மும்பை (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மிரா ரோடு காவல் நிலையத்தில், இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதன்படி, சனாதன தர்மம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ மற்றும் 295 ஏ ஆகிய இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருப்பதற்கு தன்னுடைய வாழ்த்துகள் என கூறினார். மேலும், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது என்றும், கொசு, டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் எனவும் பேசினார்.
அது மட்டுமல்லாமல், சமத்துவத்துக்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.