கரோனா நெறிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மும்பை மற்றொரு பொதுமுடக்கத்தைச் சந்திக்கும் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குறைந்தபாடில்லை. ஆனால், மக்கள் பலரும் மாஸ்க் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் சுற்றித்திரிகின்றனர். இதுகுறித்து மும்பை மேயரும், சுகாதாரத் துறையினரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், சில அரசு அலுவலர்களுடன் இணைந்து பைக்குல்லாவிலிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி) செல்லும் புறநகர் ரயிலில் பயணித்தார். அங்கு முகக்கவசம் இல்லாமல் பயணிப்போருக்கு அறிவுரை வழங்கினர்.