மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1992ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் தலைமறைவாகி, 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 47 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ”கடந்த 1992 ஆம் ஆண்டு திண்டோஷி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கலவர வழக்கில், ஒன்பது பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டார்.
மீதமுள்ள 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்கள் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் அவர்களை தேடிவந்தனர். இந்த குற்றவாளிகளில் ஒருவர் மேற்கு புறநகரில் உள்ள திண்டோஷி பஸ் டிப்போவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அவரை இன்று (டிசம்பர் 11) கைது செய்தோம்.