மும்பை:அரபிக் கடலில் சொகுசுக் கப்பல் ஒன்றில் நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் அக்.4ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். தற்போது, அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் பிணை கோரி ஆர்யன் கான், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அக். 8ஆம் தேதி அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பின்னர், ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மேல்முறையீடு செய்தது.
உயர் நீதிமன்றம் விசாரணை
இதற்கிடையே, 20 நாள்களுக்கு பின்னர் அக்.21ஆம் தேதி நடிகர் ஷாருக் கான், அவரது மகனை சிறையில் சென்று சந்தித்தார். இதனையடுத்து, ஆர்யன் கான், அவரது நண்பர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனுவினை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (அக். 26) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதையடுத்து, மூவரின் பிணை மனு குறித்த விசாரணை இன்று (அக். 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி ஆஜரானார்.
இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமெச்சா ஆகிய மூவருக்கும் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பிணை குறித்த முழு தகவல்கள் நாளை (அக். 29) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆர்யன் நாளை அல்லது நாளை மறுநாள் (அக். 30) சிறையில் இருந்து விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!