தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சஞ்சய் தத் விடுதலை: பேரறிவாளன் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்! - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை

குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? அதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க மகாராஷ்டிர தகவல் ஆணையத்திற்கு (எஸ்ஐசி)மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mumbai-hc-notice-to-sic-on-rajiv-case-convict-dutt-remission-plea
mumbai-hc-notice-to-sic-on-rajiv-case-convict-dutt-remission-plea

By

Published : Feb 20, 2021, 1:30 PM IST

Updated : Feb 20, 2021, 8:28 PM IST

மும்பை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின்போது பயன்படுத்திய வெடிகுண்டிற்கு பேட்டரி வாங்கித் தந்ததாகக் கூறி பேரறிவாளனின் 19 வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 30 ஆண்டுகள் கடந்தும் அவர் சிறை தண்டனை அனுபவித்துவருகிறார்.

இதற்கிடையில் அவரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தியும் உள்ளது. இருப்பினும், இவரது விடுதலை குறித்து பதிலளிப்பதில் தமிழ்நாடு ஆளுநர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் காலதாமதம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலைசெய்யப்பட்டது எப்படி என்பதை அறிந்துகொள்ள பேரறிவாளன் தரப்பு முயன்றுள்ளது. இதற்கான உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் கே.கே. தேதத், ஆர்.ஐ. சக்லா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக மகாராஷ்டிர சிறைத் துறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்டிருந்தோம்.

அவர்கள் இது மூன்றாவது மனிதர் குறித்த தகவல்கள் எனப் பதிலளிக்க மறுத்துவிட்டனர். பின்னர், மகாராஷ்டிர தகவல் ஆணையமும் இது குறித்த முறையான பதில் அளிக்க மறுத்ததால் மும்பை நீதிமன்றத்தை அணுகியதாகத் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான பதில் அளிக்கப்பட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? அதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க மகாராஷ்டிர தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

Last Updated : Feb 20, 2021, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details